Saturday, November 30, 2013

ஆதியாய் நின்றார் அவர்!

 
இயல்வாக ஈன்துழா யானடிக்கே செல்ல,
முயல்வார் இயலமரர் முன்னம், - இயல்வாக
நீதியா லோதி நியமங்க ளால்பரவ,
ஆதியாய் நின்றார் அவர்.
 
அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானது திரு வடிகளில் கிட்டுதற்குத் தகுதியாக  முன்னம்(பலகாலமாக)  முயற்சி செய்தவர்கள் (யாரென்றால்) இயல் அமரர் அதாவது தகுதிக்குரிய  நித்ய சூரிகள்,(இவர்களைப்போல நாமும் அவனது திருவடிக்குப்பாத்திரமாக வேண்டுமெனில்)  இயல்வு ஆக--அதற்குப்பொருத்தமாக  நீதியால் ஓதி... வேதம்  ஓதி..நியமங்களால் பரவ--- அந்த வேதம் கூறிய பொருளை அறிந்து அதன்படி நடக்குமாறு ஆதியாய்---முற்பட்டு நிற்கிறார்
அவர்-எம்பெருமான்.
 
எம்பெருமானை  அடைய  நித்யசூரிகளுக்கு மட்டுமில்லை நமக்கும் அத்தகுதியை  உண்டாக்கவே  ஆதியாய்  நமக்காக  நம்மை செயல்படுத்த  பெருமான்  காத்திருக்கிறாராம்  என்னே  கருணை அவனுக்கு!  வேதம் ஓத முடியாதவர்கள்  திவ்யபிரபந்தம் எனும் வேதத்திற்கு சமமான  ஆழ்வார் பெருமான் பாசுரங்கள் வாசித்து ஆழ்ந்து ஆராதனை செய்து உய்வோமாக.

Friday, November 29, 2013

அவியாத ஞானமும் வேள்வியும் நல்லறமும்....

 
செவிவாய் கண்மூக் கு   உடலென் றைம்புலனும்
செந்தீபுவிகால் நீ்ர் விண் பூதமைந்தும் -அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமுமென்பரே
ஏனமாய் நின்றாற் கியல்வு.
 
 
ஏனமாய் நின்றார்க்கு   என்பதை முதலில் கொள்ளவேண்டும் அதாவது  
 
வராஹ அவதாரம் செய்து  தானே  செயல்களைப்புரியும் பெருமானைப்பெறுவதற்கு
 
செவி வாய் கண் மூக்கு உடல் என்று பஞ்ச இந்திரியங்களும்
சிவந்ததீ     பூமி காற்று(கால்) நீர்     வானம் என்னும்   பூதங்களால் ஆன தேகமும்
இடைவிடாமல் பெருமானை சிந்திப்பதற்கான பக்தியும்
அந்த பக்தி வளரக்காரனமாக இருக்கிர  அக்னிஹோத்திரம் போன்ற வேள்விகளும்
பக்தியை வளர்க்கக்கூடிஅய் விவேகமும் தர்மமும்
இயல்வு என்பரே....சாதனங்கள் என்று சொல்கிறார்களே  இது தகுதியோ?
 
 
 
ஆபத்து நேரிடும்போது, தானே வந்து பாதுகாப்பவனன்றோ எம்பெருமான் என்னவேண்டி ஏனமாய் நின்றாற்கு என்கிறார்
  மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாய்த் திருவவதரித்து அரியன செய்ததெல்லாம் அடியார்க்கன்றோ?.
 
 

Thursday, November 28, 2013

வாய் அவனை அல்லது வாழ்த்தாது!

வாய்  அவனை அல்லது வாழ்த்தாது-கை உலகம்
தாயவனை அல்லது தாம் தொழா-பேய்முலை நஞ்சு
ஊண் ஆக  உண்டான் உருவொடு பேர் அல்லால்
காணா  கண் கேளா செவி.

ஆழ்வார் பெருமானின் 11வது பாசுரம் இது..

இதைப்போலவே  இருக்கும்     இந்த இரு பாடல்களைப்பாருங்கள்...

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே


பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே

என்ற சிலப்பதிகாரப்பாடல்  நினைவுக்கு வருகிறது

ஆழ்வார் பெருமான் பாசுர விளக்கம் பார்ப்போம்


என் வாயானது சர்வேஸ்வரனையன்றி  யாரையும்  வாழ்த்தாது,  எனது கரமானது உலகின் தாய்போன்றவனை(பெற்றதாயினும் ஆயின செய்யும் என்னும் குலசேகர ஆழ்வார் அருளியதை நினைப்போம் இங்கு) தவிர மற்றவரை வணங்காது..
பூதனையிடம் நஞ்சை உணவாக  உண்டானே அவனது    திருமேனியையும்  திருநாமமும் தவிர என் கண்கள்  வேறேதும் காணாது (என் அமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக்கானாவே  என்றாரே பாணரும்) செவி வேறெதையும் கேட்காது.
எத்தனை அருமையான  பாட்டு! எத்தனை எளிமை  ஆழ்வாருக்கு! அதைவிட  எத்தனை  பிரியம் அவருக்கு  பெருமான் மீது!  பொய்கைஆழ்வார் பெருமான்  திருவடி சரணம்!




 

Wednesday, November 27, 2013

் உலகளவு உண்டோ உன் வாய்?

 
மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,
விண்ணும் விழுங்கியது மெய்யென்பர், - எண்ணில்
அலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ்
வுலகளவு முண்டோவுன் வாய்?
 
விளக்கம்
 
பூமியை  மலைகளை  அலையடிக்கும் கடலை  காற்றினை  விண்ணை  எல்லாம்  நீ    விழுங்கியது  உண்மை என்பார்கள்  அடியார்கள்.  எண்ணிப்பார்த்தால்   மிகுந்த  கல்யாண  குணங்களை  உடைய  கடல்போன்றவனான  உன் வாயானது   அன்று அதாவது  யசோதைக்கு  வாயில்  உலகைக்காட்டியபோது-  இந்த உலகளவு   விசாலமாக  இருந்திருக்குமோ?

Tuesday, November 26, 2013

மாவடிவின் நீ அளந்த மண்!

பொருகோட்டோர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன்
ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ, - விரிதோட்ட
சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க,
மாவடிவின் நீயளந்த மண்?
 
 
 
 
பொய்கைஆழ்வார் பெருமானின் இந்தப் பாசுரத்தில்  வராஹப்பெருமான்  பிரசன்னமாகிறார்.
 அவருடன்  உலகளந்த வாமனனும்!
 
விளக்கம்...
 
 
விரி தோட்ட என்ற  வரியிலிருந்து  ஆரம்பிக்கவேண்டும்.   ஒளி  விரிந்த  மகரகுண்டலங்களை அணிந்த   சிவந்த செந்தாமரை போன்ற திருவடிகளை   வளரச்செய்து  திசையெல்லாம்  நடுங்கச்செய்து  வானத்தையும் நடுங்கவைத்து  (திரிவிக்கிரமனாக வந்து)  மா(பெரிய)  வடிவத்தில் வந்து  நீ உன் திருவடியினால்  அளந்த பூமியானது,  பொருகோட்டோர் ஏனமாய்ப்புக்குஎன்பது   நிலத்தை்க்கோரப்பற்களால்குத்தி திரிகிற வராஹ மூர்த்தியாக   புக்கு என்பது பிரளய வெள்ளம்,  இடந்தாய்க்கு அன்று என்பது   அண்டத்தினின்றும் பூமியைக்குத்தி எடுத்து வந்த அக்காலத்தில், உனது, ஒருகோட்டின் மேல் கிடந்ததன்றே என்பது.. ஒரு கோரப்பல்லிலே ஏகதேசத்தில் அடங்கிக்கிடந்ததன்றோ என்பதாகும்.
 
பொருகோட்டோரேனமாய்ப்புக்கிடந்த வரலாறு:-
 
ஹிரண்யகசிபுவின் உடன்பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரன் தன் வலியையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது தேவர் முனிவர் முதலியோரது வேண்டிகோளினால் திருமால் மஹாவராஹரூபியாகத் திருவ்வதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனை நாடிக்கண்டு பொருது கோட்டினாற்குத்திக் கொன்று பாதளலோகத்திற் சார்ந்திருந்த பூமியைக்கோட்டினாற்குத்தி அங்கு நின்று எடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளினன் என்பதாம்.
 
. “பாராருலகம் முதுமுந்நீர் பரந்தகாலம் வளைமருப்பில் ஏராருருவத்தேனமா யெடுத்த வாற்றலம்மான்-” என்ற திருமங்கையாழ்வாரின் பாசுரம்  இங்கு நினைக்கத்தக்கது.

Monday, November 25, 2013

மயங்க வலம்புரி வாய் வைத்து....

மயங்க வலம்புரி  வாய் வைத்து வானத்து
இயங்கும் எறி கதிரோன் தன்னை முயங்கு அமருள்
தேர் ஆழியால்மறைத்தது என் நீ திருமாலே
போர் ஆழிக்கையால் பொருது.
 
விளக்கம்

 
திருமாலே   நீ    எண்ணிறந்த மன்னர்கள்  நெருங்கிக்கிடந்த  பாரதப்போர்க்களத்தினில்  எதிரிகள்  அஞ்சி நடுங்கும்படியாக  உனது பாஞ்சசன்யமெனும்  சங்கினை முழக்கி போர் செய்வதற்கான  கருவியாக  இருக்கும்  திருவாழியை ஏந்திய கரத்தினால் பீஷ்மர் முதலானவர்கலை  துரத்தி அதாவது போர் செய்து    தேர் ஆழியால் அதாவது சக்கரத்தினால்      ஆகாயத்தில் சஞ்சரிக்கும் சூரியனை  மறைத்ததுஎதற்காக?

எறிகதிரோன் தன்னைத்தேராழியால் மறைத்த வரலாறு:-

பாரதப்போரில் பதின்மூன்றாநாளிலே அர்ஜுனனின்  மகன் அபிமந்யுவைத் துரியோதனனின் உடன் பிறந்தாளின் கணவனான ஸைந்தவன் கொன்றுவிட,  தன் மகனைக்கொன்ற ஜயத்ரதனை மற்றைநாள் ஸூர்யாஸ்தமனத்திற்குள் தான் கொல்லாவிடில் தீயில்குதித்து உயிர் துறப்பதாக அர்ஜுனன் சபதம் செய்கிறான்.

 அதனையறிந்த பகைவர்கள் பதினாலாநாள் பகல்  முழுவதும் ஜயத்ரதனை வெளிப்படுத்தாமல் சேனையின் நடுவே நிலவறையில் மறைத்துவைத்திருக்க, அர்ஜுனனுடைய சபதம் பழுதாய்விடுமே என்று சிந்தித்துக் கண்ணபிரான் சூர்யனை அஸ்தமிப்பதற்குச் சில நாழிகைக்கு முன்னமே தனது திருவாழியினால் மறைத்துவிட, அப்பொழுது எங்கும் இருள் பரவுகிறது.

 அர்ஜுனன் தன் உறுதியின்படி அக்னிப்ரவேசம் செய்யப்புக, அதனைக் களிப்போடு காண்பதற்குத் துரியோதனாதிகளுடனே ஸைந்தவன் வந்து எதிர்நிற்க, அப்போது கண்ணபிரான் திருவாழியை வாங்கிவிடவே பகலாயிருந்ததனால் உடனே அர்ஜு்னன் ஜயத்ரதனைத் தலைதுணித்தனன் என்பதாம்.1:

 “நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே நாழிகை போகப் படை பொருதவன் தேவகிதன் சிறுவன்” என்றார் பெரியாழ்வாரும்.


.



 

Sunday, November 24, 2013

கார் ஓத வண்ணன் படைத்த மயக்கு

  பொய்கை ஆழ்வாரின் 7வது பாசுரம் இது

திசையும்  திசை உறு தெய்வமும்   தெய்வத்து
 இசையும்  கருமங்கள் எல்லாம் அசைவு இல சீர்க்
கண்ணன்  நெடுமால் கடல் கடைந்த கார் ஓத
வண்ணன் படைத்த மயக்கு


எல்லா  திசைகளையும் அந்த திசைக்கான தேவதைகளையும்  அவைகள்  புரியவேண்டிய செயல்களையும்(கடமைகளையும்)  எல்லாவற்றையும்  அசைவு இல  சீர்க் கண்ணன் நெடுமால்  கடல கடைந்த  கருத்த குளீர்ந்த பெருமான் ப்டைத்த  மயக்கத்திற்குரியதாகும் அதாவது  நிலையானது  அசைவு இல்லாத  கண்ணன்  தான்  மற்றவை  மயக்கத்திற்குரியவை நிலையானதல்ல  என்கிறார்.. மேலும் நல்ல விளக்கங்களை ஆராய்ந்து மறுபடி எழுதுகிறேன்

Saturday, November 23, 2013

கண்டேன் திருவரங்க மேயான் திசை!

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ? ஏழைகாள் – அன்று
கருவரங்கத்துள்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்கமேயான் திசை” –


 ஆறாவது பாசுரத்தில்  அரங்கனிடம்  வந்துவிட்டார்!

இதன் விளக்கம் என்  சிற்றறிவுக்கு எட்டியவரை...

கடல் வண்ணத்துப்பெருமானை நான்  ஒருக்காலும் மறப்பதில்லை  இன்று நான் மறப்பேன் என  நினைத்தீர்களோ (அவனை நினைக்காத)  ஏழைகளே!(அரங்கச்சொத்து  இல்லாதவர்கள் ஆழ்வார்பெருமானுக்குஏழைகளாம்)
 அன்று  தாயின் கருவறைக்குள் இருந்தபடியே  கைதொழுதேன்  அவன் திசை திருவரங்கமேயாகும் என  கண்டுகொண்டேன்!

கர்ப்பவாசத்திலேயே ,மறக்காத நான்  இன்று மறப்பேன் என்று நினைத்தீர்களா அறிவுகெட்டவர்களே(ஏழைகாள்) என்றும்   இப்பாட்டிற்கான  அர்த்தம்  ஆராய்ந்துபார்த்தால்  கடலாய் விரிகிறது. அதன் ஒரு துளியாய்  இங்கு  அரங்கனுக்கும் ஆழ்வார் பெருமானுக்கும் சமர்ப்பணம்!

     
ஏழை என்பதற்கு இவர் பெரியபெருமாளை இழந்து நிற்பவர்கள், பெருஞ்செல்வம் படைத்தோராயினும் ஏழையே என்கிறார்

Friday, November 22, 2013

உருவம் எரி கார்மேனி ஒன்று!

பொய்கைஆழ்வாரின் 5ம்பாசுரம்

அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள் ஊர்தி
உரை நூல் மறை உறையும் கோயில் -வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஓன்று
 
 
அரியும் சிவனும்  ஒன்று என்பதான   பாசுரம்!
 
சங்கர நாரணன் -வாகனம் ரிஷபம் தர்ம சொரூபம்
 
 கருடன் வேத சொரூபம் .
 
.தானம் போன்ற நான்கு கால்கள் ரிஷபம்
 
..நிகமம் ஆகமம்–வேதம் சொல்லும் நாராயணன் பெருமை/
 
வரை=கைலாசம்
 
நீர் =கடல் பெண் எடுத்தது அங்கு இருந்து பர்வத ராஜ குமாரி பார்வது
 தொழில் கை ஆயுதம்
 
 அடுத்து சொல்கிறது உருவம் எரி
 
அதாவது அக்னி போல சிவன்
 
இவனோ கார் மேனி முகில் வண்ணன்
 
 -சர்வமும் அவனே..வாசுதேவ சர்வம் இதி –
 
 
 
அன்னான்தனை, ஐயனும்,
     ஆதியொடு அந்தம் ஒன்றாம்
தன்னாலும் அளப்ப அருந்
     தானும், தன் பாங்கர் நின்ற
பொன் மான் உரியானும்
     தழீஇ எனப் புல்லி, பின்னை,
சொல் மாண்புடை அன்னை
     சுமித்திரை கோயில் புக்கான்.
 
கம்பனும்  இப்படி சொல்கிறான்
 
ஐயனும்- இராமனும்; ஆதியொடு அந்தம் ஒன்றாம் தன்னாலும்
அளப்ப அருந் தானும்
- முதலும்  முடிவும் ஒன்றாக உள்ள தன்னாலும்
வரையறுத்துக் கூறமுடியாதுள்ள திருமாலாகிய தானும்; தன் பாங்கர்
***பொன்னிறமான மான் தோலை  உடைய சிவபிரானும்;  தழீஇஎன -
தழுவிக் கொண்டாற் போல;  அன்னான் தனை- அந்த இலக்கு
வனை;
புல்லி - தழுவி;  பின்னை- பிறகு; 
மாண்பு  உடை சொல்
அன்னை
- மாட்சிமை உடைய சொற்களை உடையளாகிய சுமித்திரைத்
தாயின்;  கோயில் புக்கான் -மாளிகையைஅடைந்தான்.
     இராமன் இலக்குவனைத் தழுவிய காட்சி திருமால் சிவபெருமானைத்
தழுவி  நின்றது போலும் என்றார்.  இலக்குவன் பொன்னிற மேனியன்
ஆதலின் பொன்னிறமான மான் உரி போர்த்தசிவபிரான் போல ஆயினன்.
!

Thursday, November 21, 2013

நெறி வாசல் தானேயாய் நின்றானை...

நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து
பொறி வாசல் போர் கதவம் சார்த்தி அறிவானாம்
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த
ஆல் அமர் கண்டத்து அரன்
 
 
பொய்கை ஆழ்வார் பாசுரம்  4
 
விஷம் கொண்ட கழுத்துடைய  அரனுக்குத்தெரியுமாம்  என  ஆழ்வார்  ஆரம்பிப்பதாக கொள்ளவேண்டும்  அதாவது  எம் பெருமான்   நமது ஐந்து பொறிகளின் (அவஸ்தை) போர் மூளும் கதவை அடைத்து   தானே உபாயமும் உபேயமுமாக இருக்கிறவனை  அன்று ஆலமரத்தின் கீழ்  நான்கு ரிஷிகளுக்கு(அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்க்கண்டேயர்) தர்மோபதேசம்  செய்தவனை   சிவன் அறிவானாம்( என்று  இலேசான பரிகாசத்வனியுடன் சொல்கிறார்)

Wednesday, November 20, 2013

அறிகிலேன் நீ கண்ட நெறி!

பார் அளவும் ஓர் அடி வைத்து, ஓர் அடியும் பார்  உடுத்த
நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே, சூர்  உருவின்
பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீ அளவு கண்ட நெறி.


பொய்கை ஆழ்வார்  அருளிய 3வது  பாசுரம்...

 இந்தப் பாசுரமும் ஆயனுக்கே

உலகையே  காலால் ஒரு சுற்று சுற்றி அளந்தவன்

-பார்(உலகு) அளவும் ஓர் அடி வைத்து -ஆரண ஜாலம் தாண்டி நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே

-உடனே கிருஷ்ணா அவதாரம் சூரு-அழகான பெண் போல்–(இங்கே  யசோதை)

தேவ கணம் சேர்ந்தவள்..-பேய்(பூதனை) அளவு–உயிரோடு சேர்த்து பாலை உரிந்தாய்–
அறிகிலேன்–இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் …

அவளை உறிஞ்சு விட்டாய்–

 என்ன -சங்கல்பம் என்ன அறிகிலேன்

 

Tuesday, November 19, 2013

என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது?

2ம் பாசுரம் பொய்கைஆழ்வார் பெருமானுடையது

என்று கடல் கடைந்தது? எவ்வுலகம் நீர் ஏற்றது?
ஒன்றும் உணரேன் நான் அன்று அது
அடைத்து  உடைத்து  கண்படுத்த ஆழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த  பார்!

  விளக்கம் 

என்று  கடலை  (தேவர்களுக்காக)  கடைந்தான்  ?
எந்த உலகம்  நீரை(மாவலி  அளித்த  நீர் மூவுலகை அளந்த வாமனனால்) ஏற்றுக்கொண்டது?
ஒன்றையும் நான் உணரவில்லை.(அந்த இனிய அனுபவங்களைப்பெற்றிலேன் என்னும்  தாபம்)  அன்று அந்தக்கடலானது உன்னால் சேதுப்பாலம் கட்டப்பட்டு அடைக்கப்பட்டது  ராவண சம்ஹாரம் முடிந்ததும் அதன் மலைக்கற்கள் உடைக்கப்பட்டன. நடந்த கால்கள் நொந்ததால்  ஆழியில் நீ  பல்ளிகொண்டாய்.இந்த  உலகமானது  உன்னால் படைக்கப்பட்டு  இடந்து(வராஹ அவதாரத்தில்  பூமியைப்பிளந்தார் பெருமான்)  உண்டு(கிருஷ்ணாவதாரம்  மேலும் பிரளயவெள்ளத்தில் உலகை உண்டு பாதுகாத்து  மீண்டும்) உமிழ்ந்த அதாவது வெளிப்படுத்தினதாகும்!

Monday, November 18, 2013

சூட்டினேன் சொல்மாலை!

முதலாழ்வார்கள் மூவர். அவர்களில்  முதலாமவரான பொய்கை ஆழ்வார்  காஞ்சிபுரம் திருவெஃகாவில் ஒரு பொய்கையில்  பூத்த பொற்றாமரை மலரில் பொலிவுடன் அவதரித்தவர். பரந்தாமனின் திருச்சங்கின் அம்சம்.வையத்தை அகலாக  வார்கடல் நீரை நெய்யாகக்கொண்டு வான் சூரிய்னை நாரணனுக்கு  விந்தைமிகு விளக்கேற்றி மகிழும்  இவரது  பாடல்கள் எளிமையானவை. காலம்   7ம் நூற்றாண்டு  நூறுபாசுரங்கள்  கொண்ட முதல் திருவந்தாதி  இவரால் பாடப்பெற்றவைகள்.
திவ்ய்பிரபந்தம் என்னும் அருந்தமிழ் வேதத்தை  தமது பாடல்களால் நம்மிடம் விட்டுச்சென்றுள்ள மகான்கள்  ஆழ்வார்கள்.



பொய்கை ஆழ்வாரின்  பாசுரங்களை ஆராதிப்போம்..

திருக்கோவிலூர் என்ற இடத்தில் அன்று.  மழை, காற்றுடன் கூடிய பின்மாலைப் பொழுது. நன்கு இருட்டிவிட்டது. மழைக்கு ஒதுங்க நினைத்த பொய்கையாழ்வார் மிருகண்ட முனிவர் ஆசிரமத்தில் உள்ள இடைகழியில் (ரேழி என்றும் சொல்லுவர். வீட்டின் அல்லது கோவிலின் நுழைவாயிலில் உள்ள நடைபாதையைக் குறிக்கும்.) ஒதுங்கினார். அங்கே சற்று ஓய்வெடுக்க நினைத்து, படுத்துக் கொண்டார். சற்று நேரத்திற்கெல்லாம் அங்கே பூதத்தாழ்வார் வந்தார். “ஒருவர் படுக்கலாம் இருவர் இருக்கலாம்” என்று கூறி, பொய்கையாழ்வார் அவருக்கு இடம் கொடுத்தார். சற்று நேரம் கழித்து பேயாழ்வார் நனைந்துகொண்டு அங்கு வந்தார். “ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்” என்று கூறியபடியே மூவரும் நின்றனர். அப்போது அந்த இடத்தில் திடீரென்று ஒரு நெருக்கடி ஏற்பட்டது போல் உணர்ந்தார்கள். யார் இப்படி இவர்களைப் போட்டு நெருக்குகிறார்கள் என்று காண்பதற்காக முதலில் பொய்கையாழ்வார் பாடிய  பாசுரம் இது.


முதல் திருவந்தாதி.
இயற்பா.

  தனியன்

முதலியாண்டான் அருளிச்செய்தது.

கைதை சேர்  பூம்பொழில் சூழ் கச்சிநகர் வந்துதித்த
பொய்கைப்பிரான் கவிஞர்பேரேறு-வையத்து
அடியவர்கள்  வாழ அருந்தமிழ் நூற்று அந்தாதி
படி விளங்கச்செய்தான் பரிந்து...



இனி  பாசுரம்.

வையம் தகளியா, வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடர் – ஆழி நீங்குகவே

உலகமே அகலாக, கடலே நெய்யாக, சூரியன் விளக்காக, இடர் நீங்க பொய்கை ஆழ்வார் சூட்டிய சொல்மாலை  துன்பக்கடலை  நீக்கிவிடும். ஆம் அதைத்தான்  இங்கு  அருள்கிறார் ஆழ்வார் பெருமான்.

 சுடர் ஆழியான்  அடியாம்!  ஒளி மிகுசக்கரம் கையேந்திய
அண்ணலின் திருவடியைப்பிரார்த்தனை செய்து  சொல்மாலையை  கட்டத்தொடங்குகிறார்.

 

Saturday, November 16, 2013

பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே!

மதுரகவி ஆழ்வார்   வாழித்திருநாமம்!

எம்பெருமான் கருணையால்  மதுரகவி ஆழ்வார் அருளிய பாசுரங்களை   முடித்தோம்.
ஆழ்வாரின் வாழித்திருநாமம்  இன்று.

சித்திரையிற்  சித்திரைநாள் சிறக்க வந்தோன் வாழியே
திருக்கோளூர் அவதரித்த  செல்வனார் வாழியே
உத்தர கங்கா தீரத் துயர் தவத்தோன் வாழியே
ஒளிக்கதிரோன்  தெற்குதிக்க உகந்து வந்தோன் வாழியே
பத்தியோடு பதினொன்றும்பாடினான்  வாழியே
பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே
மத்திமாம் பதப்போருளை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி திருவடிகள் வாழி வாழியே!




மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்!

(அடுத்து  திவ்யபிரபந்தத்தில்  முதலாழ்வார் பெருமான்களை  தரிசித்து அவர்தம் இயற்றிய பாசுரங்களை ஆராதிக்க  அரங்கன் அருளவேண்டும்.
 

அடைந்தவர்கட்கெல்லாம் அன்பன்.!

அன்பன் தன்னை* அடைந்தவர்கட்கெல்லாம்
அன்பன்* தென் குருகூர் நகர் நம்பிக்கு*
அன்பனாய்* மதுர கவி சொன்ன சொல்
நம்புவார் பதி* வைகுந்தம் காண்மினே*



எனது  அறிவிற்கு எட்டிய  விளக்கம்.


அன்பனான   மதுரகவியின்  ஆச்சார்யப்பெருமான்  தன்னை அடைந்த அனைவருக்கும்  அன்பன்  ஆன நம்மாழ்வார்மீது அன்பு கொண்டவனான  மதுரகவி  இயற்றிய  பாசுரங்களை  பாடுவோர்பரமபதம்  அடைவார்கள் என நம்பிக்கை கொள்ளலாம்
கடைசி பாசுரத்தில் திருநாடு  வைபவத்தை  வைகுந்தம்  சென்றுவந்த வள்ளலின்  சீடரான  மதுரகவி    அருளி இருப்பதில்  வியப்பென்ன!



ஆழ்வார் அன்பரின் விளக்கம்
தன்னை அடைந்தவர், அடையாதவர் எல்லோரிடத்திலும் அன்புடன் இருப்பவர் எம்பெருமான்(வாத்சல்யம்). எம்பெருமானுக்கு உகப்பாக காரியங்களைச் செய்பவரே அடியார்கள் ஆவர். ஆக எம்பெருமான் உகந்ததைப் பற்ற வேணும் என்றால் அவன் அடியார்களைப் பற்ற வேண்டும். அதனால் அஞ்ஞான இருளைப் போக்குபவரான, எம்பெருமான் மிகவும் உகக்கும் ஆசார்யானையே முதலில் தாமும் முதலில் பற்றி நமக்கும் வழி காட்டுகிறார் ஸ்ரீ மதுரகவிகள். ஏன் என்றால் ப்ராப்திக்கு எல்லையும், புருஷகாரம் செய்பவரும் அவரே. இப்பாசுரங்களைத் தஞ்சமாகப் பற்றுபவருக்கு இடம் திருநாடான திருப்பரமபதம் ஆகும் என்று பூர்த்திஆகிறது இத்திவ்யப்ரபந்தம்

உந்தன் மொய்கழற்கு அன்பையே!

பயன் அன்றாகிலும்* பாங்கல்லர் ஆகிலும்*
செயல் நன்றாகத்* திருத்திப் பணி கொள்வான்*
குயில் நின்றார் பொழில் சூழ்* குருகூர் நம்பி*
முயல்கின்றேன்* உந்தன் மொய்கழற்க்கு அன்பையே*




 எனது  தாழ்மையான விளக்கம்:

பயனில்லாமல்   இருப்பவரையும்  பாங்காய் நடக்கத்தெரியாதவராயினும்  அவர்களின்  காரியங்களைத்திருத்தி  தனக்கு  உகந்த  பணி செய்ய நியமித்துக்கொள்வான்  குயில்  வாழும்  சோலை சூழ்ந்த  குருகூரின் நம்பியே  அன்போடு நான்  உந்தன்   திருவடிதொழுகின்றேன்

இது  இன்னொரு ஆழ்வார் அன்பரின் விளக்கம்.

பிறர் திருந்துவதால் தமக்கு ஒரு பிரயோஜனம் இல்லாமல் இருந்தாலும், அதே போன்று கேட்பவர்களிடத்தில் திருந்தும் மனப்பான்மை இல்லாமல் போனாலும், அவருடைய குணப்பூர்த்தியால் தம்மை அண்டினவர்கள், அண்டாதவர்கள், நாட்டில் உள்ள எல்லோரும் உய்யும் படி எல்லோரையும் திருத்திப் பணிகொள்பவர் சுவாமி நம்மாழ்வார். மேலும் சுவாமி நம்மாழ்வாரைப் பற்றினால் இங்கேயே ஆனந்தம் பெறலாம் என்றும், எம்பெருமானை அடைவதற்கோ தெளிவிசும்பு திருநாட்டுக்கு எழுந்தருள வேண்டும் என்றும், அதுவும் நித்யர்கள் மற்றும் முக்தர்களே அங்கு அனுபவிக்கமுடியும் என்றும், ஆனால் தமக்கோ சுவாமி நம்மாழ்வாரின் திருவடிகளைப் பற்றினவாரே ஆனந்தம் கிடைத்ததையும், அதற்க்கு பிரதி உபகாரம் ஒன்றும் செய்ய முடியாமல் தடுமாறி அன்பு செய்ய முயலுகிறார்

^^^^^  நாம்  அறியாமல் தவறு செய்துவிட்டால் இந்தப்பாசுரத்தை  இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து பாடினால்  நம் தவறுகள்  மன்னிக்கப்படும் என்று சிலர் சொல்கிறார்கள்

Wednesday, November 13, 2013

அடிமைப்பயன் அன்றே.

மிக்க வேதியர்* வேதத்தின் உட்பொருள்*
நிற்கப் பாடி* என் நெஞ்சுள் நிறுத்தினான்*
தக்க சீர்ச்* சடகோபன் என் நம்பிக்கு* ஆட்
புக்க காதல்* அடிமைப் பயன் அன்றே*


வேதத்தின் சாரம் திருவாய்மொழி, திருவாய்மொழி பத்துப்பத்துகளுக்கும் சாரம் பயிலும் சுடரொளி மற்றும் நெடுமாற்க்கடிமைப் பாசுரங்கள். சிறந்த பண்டிதர்களால் ஓதப்படும் வேதசாரமான திருவாய்மொழி திவ்யப் ப்ரபந்தத்தைக் கல்லில் குழியிட்டு நீர் நிறுத்துவதைப் போல, கல் போன்ற தம் மனதைக் கரைத்து அதில் திருவாய்மொழிப் பாசுரங்களை நிறுத்தினார் சுவாமி என்று அருளுகிறார் ஸ்ரீ மதுரகவிகள். அவருக்கு எவ்வளவு மேன்மை சொன்னாலும் அது மிகை ஆகாது என்றும், மேலும் நம்மாழ்வாரின் திருவடிகளில் ஏற்ப்பட்ட பக்தியே, அவருக்கு அடிமையாய் இருந்து கைங்கர்யம் பண்ணும் பிரயோஜனம் கிடைத்தது என்றும் மங்களாசாசனம் பண்ணுகிறார் இப்பாசுரத்தில்

Tuesday, November 12, 2013

ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர்..

அருள் கொண்டாடும்* அடியவர் இன்புற*
அருளினான்* அவ்வருமறையின் பொருள்*
அருள் கொண்டு* ஆயிரம் இன்தமிழ் பாடினான்*
அருள் கண்டீர்* இவ்வுலகினில் மிக்கதே*




விளக்கம்:

பரம பக்தர்களான அடியவர்கள் இன்புறுவதற்காக, கருணையே வடிவெடுத்தவனான எம்பெருமான், வேதார்த்தங்களை வெளியிட்டுஅருளினான்(வேதமறிந்த அதிகாரிகள் மட்டும் உய்யும் படி ஆயிற்று). இப்படி வேத ரகஸ்யங்களை வெளியிட்டு அருளின எம்பெருமானுடைய கிருபையைக் காட்டிலும், அவனுடைய கிருபையாலே சுவாமி நம்மாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய அழகிய இனிய தமிழ் மொழியில் அமைந்த திருவாய்மொழியோ அனைவரும் உய்வதற்காக அருளிச்செய்யப்பட்ட பிரபந்தம் ஆன படியாலே, அந்த கிருபை ஒன்று மட்டுமே இவ்வுலகினில் பெரியதாக விளங்குகிறது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்

Monday, November 11, 2013

எண் திசையும் அறிய இயம்புகேன்!


கண்டுகொண்டு என்னைகாரிமாறப்பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச்சடகோபன் அருளையே!


எம்பெருமான் ஆழ்வாரைக் கண்டு கொண்டமைப் போல, ஆழ்வார் தம்மைக் கண்டுகொண்டு தம்மிடம் இருந்த வினைகள் தம்மைத் தொடராமலும், பிறரை அடையச் செய்யாமலும் உருத்தெரியாமல் அழித்தொழிந்தார். அப்படிப்பட்ட சுவாமியின் புகழை எட்டு திக்குகளிலும் பரப்புவேன் என்கிறார் இந்தப்பாசுரத்திலே! குருமீதான அதீத ஈடுபாடு இப்பாசுரத்தில்  விளங்குகிறது

Sunday, November 10, 2013

இகழ்வு இலன் காண்மினே!

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத்திருக்குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே.

இன்றிலிருந்து  காலத்திற்கும் எம்பிரானாகிய நம்மாழ்வார்   தனது  பெருமையைக்கூறும்  அருளுக்கு என்னைப்பாத்திரமாக்கினான்.  மறுபடி   இகழ்வான  காரியத்தில் எனக்கு ஈடுபாடு வராதபடி  என்னைவைத்திருக்கிறான் குன்றமாடத்திலிருக்கும் குருகூர் நம்பியான  சடகோபன்.

ஆழ்வார் பெருமானின்  கடாட்சம்  தனக்கு இருப்பதால் இழிவென்பது  இல்லை என்கிறார் மதுரகவி.

Saturday, November 9, 2013

அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே!

நம்பினேன் பிறர் நன்பொருள்தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்
செம்பொன் மாடத்திருகுருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே!

இந்தப்பாசுரத்தில்... 




ஸ்ரீ மதுரகவிகள் தம்முடைய குற்றங்களையும், ஸ்ரீ நம்மாழ்வார் தமக்குச் செய்த மகா உபகாரத்தைப் பற்றியும் சொல்கிறார். குற்றங்கள் ஆவது – பிறருடைய பொருள்களையும், பெண்களையும் நம்பி இருந்தமை. உபகாரம் என்பது ஆழ்வாரிடத்திலே கடாக்ஷம் பெற்றது.

தனது இழிமையைப்பாராமல்  நம்மாழ்வார்  தன்னை அன்பனாய்  நம்பிக்கைக்கு உரியவனாய் ஆக்கியமைக்கு அவருக்கே  தனது கைங்கர்யப்பலனை சித்தித்தமைக்கு மங்களா சாசனம்  பாடுகிறார்.
 

Friday, November 8, 2013

சடகோபன் என் நம்பியே!

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக்கருதுவர் ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னை     ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே!

பொருள்..

நான்கு வேதம்  கற்றவர்கள் என்னை உபயோகம் இல்லாதவனாகக்கருதுவர்  ஆனால் அன்னையாக அப்பனாக என்னை ஆண்டிடும்  தன்மைகொண்ட சடகோபனே  என் நம்பி அதாவது என் பெருமான்!
Worthy and graceful scholars of the four Vedas had found me worthless in my ways. But father, mother both-in-one, Satakopa now rules my days.

Thursday, November 7, 2013

அடியேன் பெற்ற நன்மையே!

திரி தந்தாகிலும் தேவர்பிரானுடை
கரிய கோலத்திரு உருவம் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர்நம்பிக்காள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மைக்கே
 
 
3வது  பாசுரத்தில்   தேவபிரானைக்கண்டதாய் சொல்கிறார் பாருங்கள்!  தேவு மற்று அறியேன்  என்றார் முந்தையப்பாடலில். இந்தப்பாடலில்  எங்கே திரிந்தாலும்  தேவர்களின் பிரானின்  கரிய  கோலத்திரு உருவைக்காண்பாராம்!  குரு பக்தி இருக்கிறவனை  அண்ணல் கைவிடுவாரா  காட்சி அளிக்கத்தான் செய்வார். நம்மாழ்வாருக்கு உரியவனாய் இருப்பதால் அவர் பெற்ற நன்மை   இதுதான்!
 
பாடலின்  உட்பொருள்  மிக ஆழமானது.அனுபவித்துப்பின் விளக்கவேண்டும்.

Wednesday, November 6, 2013

பாவின் இன்னிசை பாடித்திரிவனே!

மதுரகவி ஆழ்வார்  இயற்றிய  இரண்டாம் பாடல் இன்று
அந்தாதி வரிசையில் பாடல்கள் அமைந்துள்ளன.  முதல்பாடலின் கடைசி  சொல் நாவுக்கே  என முடிந்தது இப்பாடல் அந்த சொல்லை  முதலில் கொண்டு தொடங்குகிறது.

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் திருவடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை  பாடித்திரிவனே!



எனது நாவினால்  நம்மாழ்வாரைப்பற்றிப்பேசி (நவிலுதல்=உரைத்தல்)  மகிழ்ச்சியை அடைந்தேன்   அவனது  பொன்னான திருவடியைப்பற்றினேன் 
உண்மையில்  வேறு தெய்வம் ஏதும்  நானறியேன்  குருகூர்நம்பியின்  பாசுரங்களை இன்னிசையுடன் பாடித்திரிவேனே!

குருவே  தனக்கு தெய்வம் என்கிறார் ஆழ்வார் இப்பாடலில். அவரைப்பற்றி பேசுதல் மகிழ்ச்சியாம்  அவரது பாக்களை இசைபடப்பாடித்திரிதலை  பெருமைபட கூறுகிறார்!
 

Monday, November 4, 2013

அமுதூறும் என் நாவுக்கே!!

மதுரகவி ஆழ்வார் என்பவர் மட்டும் ஆண்டவனைப் பாடாமல் தம் ஆச்சாரியரான நம்மாழ்வாரைப் போற்றிக் கொண்டாடி ஒரேயொரு பதிகம் பாடித் தாமும் ஆழ்வாராகவே ஆகிவிட்டார்.

அவரைப் பற்றிக் கொஞ்சம் அறிந்து கொள்வோம்.
 
தென்தமிழ் நாட்டில் ஸ்ரீவைகுண்டத்தின் அருகே விளங்கும் திருத்தலம் ஆழ்வார் திருநகரி ஆகும். ஆழ்வார் பாடல் பெற்றதால் இது திவ்வியதேசமும் ஆகும். இவ்வூருக்குள் அவதரித்து அசையாப் பிண்டமாய் இருந்து பரம்பொருளாம் ஸ்ரீமந் நாராயணனின் நினைவிலேயே நிறைந்திருந்தவரே நம்மாழ்வார். பிறந்தவுடனே இப்பிறவி பற்றிய தொடர்பையும் சிந்தனையையும் கொடுத்துப் பிறப்பு- இறப்புச் சுழலில் நம்மைத் தள்ளுவது சடம் என்னும் வாயு. அந்த வாயுவைக் கோபித்து விலக்கியவர் நம்மாழ்வார். அதனால் சடகோபர் என்றும் போற்றப்படுகிறார்.
இந்த நம்மாழ்வாருக்குச் சீடராகி, இவரது புகழை மட்டுமே பாடித் தாமும் ஓர் ஆழ்வாராக ஏற்றம் பெற்றவரே மதுரகவியாழ்வார் ஆவார். மதுரகவியாழ்வார் காலத்தால் நம்மாழ்வாருக்கு மூத்தவர். ஆழ்வார் திருநகரி அருகில் உள்ள திருக்கோளூரில் அவதரித்தவர்.
அந்தணர் குலத்தில் தோன்றிய மதுரகவியாழ்வார், வேதசாஸ்திரங்களைக் கற்று இறைபக்தி மேலிட்ட நிலையில் ஸ்ரீகிருஷ்ண பகவானை நேரில் தரிசிக்க விரும்பி வடதேச யாத்திரை சென்றபோது, தேற்குத் திசையில் ஒரு ஜோதிப்பிழம்பு தென்பட்டது. பல நாட்கள் அவ்வாறு தென்பட்டதால், தமது வடதேச யாத்திரையைக் கைவிட்டு, அச்சோதியை அருகில் சென்று பார்க்கும் ஆவலில் மீண்டும் தென்திசையில் நடக்கத் தொடங்கினார்.
அச்சோதியானது ஆழ்வார் திருநகரியில் மறைந்து விடவும், அவ்வூரில் ஏதேனும் விஷயம் உள்ளதா என்று அவ்வூராரிடம் கேட்டார். அவ்வூர்த் திருக்கோயிலின்கண் உள்ள புளியமரத்துப் பொந்தில் யோக நிலையில் வீற்றிருக்கும் நம்மாழ்வாரைப் பற்றி அறிந்தார். ஆர்வமுடன் சென்று நம்மாழ்வாரை வணங்கினார்.
எதுவும் பேசாதிருந்த நம்மாழ்வாரின் அருகில் சென்று, செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்? என்று வினவ, யோக நிலையிலிருந்த நம்மாழ்வார் அது அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்று பதில் கூறிவிட்டு மீண்டும் யோக நிலைக்குச் சென்று விட்டாராம்.
இவ்வுலகில் பிறக்கும் ஜீவாத்மாக்கள் அனுபவிப்பது என்ன? என்பது மதுரகவியாழ்வாரின் கேள்வி.
ஜீவாத்மாக்கள் இப்பிரபஞ்சத்திலுள்ள பொருள்களின் போகத்திலேயே திளைத்து இந்தச் சம்சார வாழ்வில் உழன்று கொண்டிருக்கும் என்பதே நம்மாழ்வாரின் பதில்.
மிக உயர்ந்த தத்துவத்தை மிக எளிமையாக விளக்கிக் கூறிய நம்மாழ்வாரையே அதுமுதல் தம்முடைய குருவாக ஏற்றுக் கொண்டார் மதுரகவியாழ்வார்


 இவர் நம்மாழ்வாரைத் தவிர வேறு எவரையும் அறியாதவர்:அவரது பேரருள் பெற்ற உண்மைச் சீடர்;உலகில் ஆசாரிய பக்தி எப்படி இருக்கவேண்டும் என்பதையும், ஆசாரியன் செய்யும் பேருபகாரத்தையும் எடுத்துக் கூறியவர். பகவானால் செய்யமுடியாததையும் ஆசாரியர் செய்து காட்டக்கூடியவர் என்பதை அறுதி இட்டவர். மதுர கவிகளின் பாடல்கள் மதுரமானவை.

நம்மாழ்வாரின் பெருமைகளை மதுரகவிகள் அருளிய கண்ணி நுண் சிறுத்தாம்பைக் கொண்டே அறியமுடியும். மதுரகவிகள் தம் பிரபந்தத்தில் நம்மாழ்வாரை ஒன்பது முறை நம்பி என்று கூறியுள்ளார். திருவாய்மொழி ஸேவிக்கும் முன்பு கண்ணி நுண் சிறுத்தாம்பு ஸேவிப்பது வழக்கம். நாதமுனிகளுக்கு நம்மாழ்வாரைப் பெற்றுக் கொடுத்ததும் கண்ணி நுண்சிறுத்தாம்பே!

முதல் பாடலைப்பார்க்கலாம்.

  கண்ணி நுண்  சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என்னப்பனில்
நண்ணித்தென்குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே!
 
 மிகவும் நெருக்கமான முடிச்சுகள் கொண்ட, உறுத்தும்படியான கயிறு கொண்டு யசோதை கண்ணனை உரலில் கட்டினாள். அவ்விதம் அவள் தன்னைக் கட்டும்படியாகத் தன்னை அந்த ஸர்வேச்வரன் ஆக்கிக் கொண்டான். இப்படியாக அவள் தன்னைக் கட்டும்படியாக, மாயச்செயல்கள் பல நிறைந்தவனான கண்ணன் செய்து கொண்டான். என்னே அவன் இரக்கம்! இத்தனை எளிமையுடையவனாக உள்ள கண்ணனை அண்டி, அவன் திருநாமத்தைக் கூறுவதைக் காட்டிலும் எனக்கு (மதுரகவி ஆழ்வார்) வேறு ஒன்று மிகவும் இனிமை அளிப்பதாக உள்ளது! ஆழ்வார் திருநகரி என்னும் தென்குருகூருக்குத் தலைவரான நம்மாழ்வார் என்று ஆழ்வாரின் திருநாமம் கூறும்போது, ஸர்வேச்வரனின் திருநாமத்தைக் கூறுவதைக் காட்டிலும் மிகவும் இனிமையாக உள்ளது. இப்படிப்பட்ட அமிர்தம் என் நாவிற்குக் கிட்டியது.
 
 

என் அமுதினைக்கண்ட கண்கள்!

கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணை
 உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக்காணாவே!

மேக வண்ணன்  ஆயர்பாடியில் கோ எனும் பசுக்களை ரட்சித்தவன்
வெண்ணையை உண்ட  திருவாய் உடையவன் என் உள்ளத்தைக்கவர்ந்தவன்
தேவர்களின் தலிவனான  அழகிய நகரின் அரங்கப்பெருமான் அவன் என் அமிர்தம் அவனைகக்ண்ட  கண்கள் மற்றொன்றினைக்காணாது.காணத்தான் முடியுமோ!!!

பாணர்பெருமானுக்கு நெஞ்சும் கண்ணும் நிறைகிறது இப்பாடலுடன்..ஆண்டாளைப்போல  இவரையும் தன்னோடு ஐக்கியப்படுத்திக்கொள்கிறான் அரங்கன்
அரங்கன் கோவிலில் நுழைவாயிலிலேயே  இடப்பக்கம். ஆண்டாளுக்கு சந்நிதி வலப்பக்கம் அவளுக்கு எதிர்சந்நிதியில்  திருப்பாணாழ்வார் நமக்கு அருள்தர காத்திருக்கிறார்.

திருப்பாணாழ்வாருக்கான வாழித்திருநாமமுடன்
திவ்யபிரபந்தம்  பகுதியின்  முதல் பத்துபாடல்களாய்  இந்த அரங்கப்ரியா தேர்ந்தெடுத்த  பாசுர வரிசை  நிறைவுபெறுகிறது.அடுத்து மதுரகவியை கொண்டுவர ஆர்வம்!

 உம்பர் தொழு மெய் ஞானத்து உறையூரான் வாழியே
உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்த வள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனி தோளில் வந்த பிரான் வாழியே
மலர்கண்ணை வேறொன்றில் வையாதான் வாழியே
அம்புலியில் மதிலரங்கர் அகம் புகுந்தான் வாழியே
அமலனாதிப்பிரான் பத்துமருளினான் வாழியே
செம்பொன் அடி முடியளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகத்தலத்தில் வாழியே!


திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்!
 

நீலமேனி ஐயோ!


 ஆல மாமரத்தின் கீழ் ஓர் பாலகனாய்  ஞாலம் ஏழும் உண்டான்
  அரங்கத்து அரவின் அணையான்
கோலமாமணி ஆரமும் முத்துத்தாமமும்   முடிவு இல்லதுஓர் எழில்
நீலமேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே!


பெரிய ஆலமரமாம் அதன்  கீழ்  ஓரு சிறுவனாய் அமர்ந்தவன்  உலகேழையும் வாயில்  கொண்டவன் அவனே அரங்கத்து அரவணையில்  இருப்பவன்  அவனது  அழகுமிகு  ரத்தினமணி மாலையும்  முத்து மாலையும்  எல்லையற்ற எழில் கொண்டது.  அந்த  நீலமேனி   இருக்கிறதே  ஐயோ என்ன சொல்வதுபோங்கள் என் நெஞ்சை   நிறைத்து விட்டதே!

ஆழ்வார் பெருமான் இங்கே  நெஞ்சத்தவிப்பில்  அதன் போதையில் ஐயோ என்பதாக மங்கலமாய் அருள்கிறார்

என்னைப்பேதைமை செய்தனவே!

பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிபிரான் அரங்கத்து அமலன்  முகத்துக்
கரியவாகி புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்
பெரியவாய கண்கள் என்னைப்பேதைமை செய்தனவே!


இப்பாடலில் நரசிம்ம அவதாரம் முதல் வரியில் வருகிறது.  ஆண்டாளும்  மாரி மலைமுழஞ்சில் என்ரபாசுரத்தில் நரசிம்மனை  நினைத்துக்கொள்வாள்.
அவன் எங்கும் இருப்பவன் அல்லவா? அவனைத்தவிர்ந்து எதனைக்கூறல் இயலும்?

பிரஹலாதனின் தந்தையின்   உடலைக்கீறியவன்  அமரர்க்கு  மிகவும்  அரியவனான  ஆதிமூர்த்தி. அவன் தான் அரங்கத்து அமலன் அவன் முகத்தில்  கரிய நிறத்தில்  புடைத்துப்பரந்து  ஒளிவீசி  சிவந்த வரிகள்  ஓடும் அந்தப்பெரியத்திருவிழிகளைக்காணும்போதே எனக்குபேதைமையாக  இருக்கிறது. ஆம்  நேத்ர தரிசனம் அல்லவோ கண்டுவிட்டார் பாணர் பெருமான்! அந்தப்பெரியவிழிகளில் இவர் புகுந்துவிட்டாராம்  பின்னர் பேசவும் வருமோ மனமே பேதைமை பிடித்தார்போலாகாதோ!