Saturday, November 30, 2013

ஆதியாய் நின்றார் அவர்!

 
இயல்வாக ஈன்துழா யானடிக்கே செல்ல,
முயல்வார் இயலமரர் முன்னம், - இயல்வாக
நீதியா லோதி நியமங்க ளால்பரவ,
ஆதியாய் நின்றார் அவர்.
 
அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானது திரு வடிகளில் கிட்டுதற்குத் தகுதியாக  முன்னம்(பலகாலமாக)  முயற்சி செய்தவர்கள் (யாரென்றால்) இயல் அமரர் அதாவது தகுதிக்குரிய  நித்ய சூரிகள்,(இவர்களைப்போல நாமும் அவனது திருவடிக்குப்பாத்திரமாக வேண்டுமெனில்)  இயல்வு ஆக--அதற்குப்பொருத்தமாக  நீதியால் ஓதி... வேதம்  ஓதி..நியமங்களால் பரவ--- அந்த வேதம் கூறிய பொருளை அறிந்து அதன்படி நடக்குமாறு ஆதியாய்---முற்பட்டு நிற்கிறார்
அவர்-எம்பெருமான்.
 
எம்பெருமானை  அடைய  நித்யசூரிகளுக்கு மட்டுமில்லை நமக்கும் அத்தகுதியை  உண்டாக்கவே  ஆதியாய்  நமக்காக  நம்மை செயல்படுத்த  பெருமான்  காத்திருக்கிறாராம்  என்னே  கருணை அவனுக்கு!  வேதம் ஓத முடியாதவர்கள்  திவ்யபிரபந்தம் எனும் வேதத்திற்கு சமமான  ஆழ்வார் பெருமான் பாசுரங்கள் வாசித்து ஆழ்ந்து ஆராதனை செய்து உய்வோமாக.

Friday, November 29, 2013

அவியாத ஞானமும் வேள்வியும் நல்லறமும்....

 
செவிவாய் கண்மூக் கு   உடலென் றைம்புலனும்
செந்தீபுவிகால் நீ்ர் விண் பூதமைந்தும் -அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமுமென்பரே
ஏனமாய் நின்றாற் கியல்வு.
 
 
ஏனமாய் நின்றார்க்கு   என்பதை முதலில் கொள்ளவேண்டும் அதாவது  
 
வராஹ அவதாரம் செய்து  தானே  செயல்களைப்புரியும் பெருமானைப்பெறுவதற்கு
 
செவி வாய் கண் மூக்கு உடல் என்று பஞ்ச இந்திரியங்களும்
சிவந்ததீ     பூமி காற்று(கால்) நீர்     வானம் என்னும்   பூதங்களால் ஆன தேகமும்
இடைவிடாமல் பெருமானை சிந்திப்பதற்கான பக்தியும்
அந்த பக்தி வளரக்காரனமாக இருக்கிர  அக்னிஹோத்திரம் போன்ற வேள்விகளும்
பக்தியை வளர்க்கக்கூடிஅய் விவேகமும் தர்மமும்
இயல்வு என்பரே....சாதனங்கள் என்று சொல்கிறார்களே  இது தகுதியோ?
 
 
 
ஆபத்து நேரிடும்போது, தானே வந்து பாதுகாப்பவனன்றோ எம்பெருமான் என்னவேண்டி ஏனமாய் நின்றாற்கு என்கிறார்
  மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாய்த் திருவவதரித்து அரியன செய்ததெல்லாம் அடியார்க்கன்றோ?.
 
 

Thursday, November 28, 2013

வாய் அவனை அல்லது வாழ்த்தாது!

வாய்  அவனை அல்லது வாழ்த்தாது-கை உலகம்
தாயவனை அல்லது தாம் தொழா-பேய்முலை நஞ்சு
ஊண் ஆக  உண்டான் உருவொடு பேர் அல்லால்
காணா  கண் கேளா செவி.

ஆழ்வார் பெருமானின் 11வது பாசுரம் இது..

இதைப்போலவே  இருக்கும்     இந்த இரு பாடல்களைப்பாருங்கள்...

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே


பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே

என்ற சிலப்பதிகாரப்பாடல்  நினைவுக்கு வருகிறது

ஆழ்வார் பெருமான் பாசுர விளக்கம் பார்ப்போம்


என் வாயானது சர்வேஸ்வரனையன்றி  யாரையும்  வாழ்த்தாது,  எனது கரமானது உலகின் தாய்போன்றவனை(பெற்றதாயினும் ஆயின செய்யும் என்னும் குலசேகர ஆழ்வார் அருளியதை நினைப்போம் இங்கு) தவிர மற்றவரை வணங்காது..
பூதனையிடம் நஞ்சை உணவாக  உண்டானே அவனது    திருமேனியையும்  திருநாமமும் தவிர என் கண்கள்  வேறேதும் காணாது (என் அமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக்கானாவே  என்றாரே பாணரும்) செவி வேறெதையும் கேட்காது.
எத்தனை அருமையான  பாட்டு! எத்தனை எளிமை  ஆழ்வாருக்கு! அதைவிட  எத்தனை  பிரியம் அவருக்கு  பெருமான் மீது!  பொய்கைஆழ்வார் பெருமான்  திருவடி சரணம்!




 

Wednesday, November 27, 2013

் உலகளவு உண்டோ உன் வாய்?

 
மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,
விண்ணும் விழுங்கியது மெய்யென்பர், - எண்ணில்
அலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ்
வுலகளவு முண்டோவுன் வாய்?
 
விளக்கம்
 
பூமியை  மலைகளை  அலையடிக்கும் கடலை  காற்றினை  விண்ணை  எல்லாம்  நீ    விழுங்கியது  உண்மை என்பார்கள்  அடியார்கள்.  எண்ணிப்பார்த்தால்   மிகுந்த  கல்யாண  குணங்களை  உடைய  கடல்போன்றவனான  உன் வாயானது   அன்று அதாவது  யசோதைக்கு  வாயில்  உலகைக்காட்டியபோது-  இந்த உலகளவு   விசாலமாக  இருந்திருக்குமோ?

Tuesday, November 26, 2013

மாவடிவின் நீ அளந்த மண்!

பொருகோட்டோர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன்
ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ, - விரிதோட்ட
சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க,
மாவடிவின் நீயளந்த மண்?
 
 
 
 
பொய்கைஆழ்வார் பெருமானின் இந்தப் பாசுரத்தில்  வராஹப்பெருமான்  பிரசன்னமாகிறார்.
 அவருடன்  உலகளந்த வாமனனும்!
 
விளக்கம்...
 
 
விரி தோட்ட என்ற  வரியிலிருந்து  ஆரம்பிக்கவேண்டும்.   ஒளி  விரிந்த  மகரகுண்டலங்களை அணிந்த   சிவந்த செந்தாமரை போன்ற திருவடிகளை   வளரச்செய்து  திசையெல்லாம்  நடுங்கச்செய்து  வானத்தையும் நடுங்கவைத்து  (திரிவிக்கிரமனாக வந்து)  மா(பெரிய)  வடிவத்தில் வந்து  நீ உன் திருவடியினால்  அளந்த பூமியானது,  பொருகோட்டோர் ஏனமாய்ப்புக்குஎன்பது   நிலத்தை்க்கோரப்பற்களால்குத்தி திரிகிற வராஹ மூர்த்தியாக   புக்கு என்பது பிரளய வெள்ளம்,  இடந்தாய்க்கு அன்று என்பது   அண்டத்தினின்றும் பூமியைக்குத்தி எடுத்து வந்த அக்காலத்தில், உனது, ஒருகோட்டின் மேல் கிடந்ததன்றே என்பது.. ஒரு கோரப்பல்லிலே ஏகதேசத்தில் அடங்கிக்கிடந்ததன்றோ என்பதாகும்.
 
பொருகோட்டோரேனமாய்ப்புக்கிடந்த வரலாறு:-
 
ஹிரண்யகசிபுவின் உடன்பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரன் தன் வலியையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது தேவர் முனிவர் முதலியோரது வேண்டிகோளினால் திருமால் மஹாவராஹரூபியாகத் திருவ்வதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனை நாடிக்கண்டு பொருது கோட்டினாற்குத்திக் கொன்று பாதளலோகத்திற் சார்ந்திருந்த பூமியைக்கோட்டினாற்குத்தி அங்கு நின்று எடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளினன் என்பதாம்.
 
. “பாராருலகம் முதுமுந்நீர் பரந்தகாலம் வளைமருப்பில் ஏராருருவத்தேனமா யெடுத்த வாற்றலம்மான்-” என்ற திருமங்கையாழ்வாரின் பாசுரம்  இங்கு நினைக்கத்தக்கது.

Monday, November 25, 2013

மயங்க வலம்புரி வாய் வைத்து....

மயங்க வலம்புரி  வாய் வைத்து வானத்து
இயங்கும் எறி கதிரோன் தன்னை முயங்கு அமருள்
தேர் ஆழியால்மறைத்தது என் நீ திருமாலே
போர் ஆழிக்கையால் பொருது.
 
விளக்கம்

 
திருமாலே   நீ    எண்ணிறந்த மன்னர்கள்  நெருங்கிக்கிடந்த  பாரதப்போர்க்களத்தினில்  எதிரிகள்  அஞ்சி நடுங்கும்படியாக  உனது பாஞ்சசன்யமெனும்  சங்கினை முழக்கி போர் செய்வதற்கான  கருவியாக  இருக்கும்  திருவாழியை ஏந்திய கரத்தினால் பீஷ்மர் முதலானவர்கலை  துரத்தி அதாவது போர் செய்து    தேர் ஆழியால் அதாவது சக்கரத்தினால்      ஆகாயத்தில் சஞ்சரிக்கும் சூரியனை  மறைத்ததுஎதற்காக?

எறிகதிரோன் தன்னைத்தேராழியால் மறைத்த வரலாறு:-

பாரதப்போரில் பதின்மூன்றாநாளிலே அர்ஜுனனின்  மகன் அபிமந்யுவைத் துரியோதனனின் உடன் பிறந்தாளின் கணவனான ஸைந்தவன் கொன்றுவிட,  தன் மகனைக்கொன்ற ஜயத்ரதனை மற்றைநாள் ஸூர்யாஸ்தமனத்திற்குள் தான் கொல்லாவிடில் தீயில்குதித்து உயிர் துறப்பதாக அர்ஜுனன் சபதம் செய்கிறான்.

 அதனையறிந்த பகைவர்கள் பதினாலாநாள் பகல்  முழுவதும் ஜயத்ரதனை வெளிப்படுத்தாமல் சேனையின் நடுவே நிலவறையில் மறைத்துவைத்திருக்க, அர்ஜுனனுடைய சபதம் பழுதாய்விடுமே என்று சிந்தித்துக் கண்ணபிரான் சூர்யனை அஸ்தமிப்பதற்குச் சில நாழிகைக்கு முன்னமே தனது திருவாழியினால் மறைத்துவிட, அப்பொழுது எங்கும் இருள் பரவுகிறது.

 அர்ஜுனன் தன் உறுதியின்படி அக்னிப்ரவேசம் செய்யப்புக, அதனைக் களிப்போடு காண்பதற்குத் துரியோதனாதிகளுடனே ஸைந்தவன் வந்து எதிர்நிற்க, அப்போது கண்ணபிரான் திருவாழியை வாங்கிவிடவே பகலாயிருந்ததனால் உடனே அர்ஜு்னன் ஜயத்ரதனைத் தலைதுணித்தனன் என்பதாம்.1:

 “நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே நாழிகை போகப் படை பொருதவன் தேவகிதன் சிறுவன்” என்றார் பெரியாழ்வாரும்.


.



 

Sunday, November 24, 2013

கார் ஓத வண்ணன் படைத்த மயக்கு

  பொய்கை ஆழ்வாரின் 7வது பாசுரம் இது

திசையும்  திசை உறு தெய்வமும்   தெய்வத்து
 இசையும்  கருமங்கள் எல்லாம் அசைவு இல சீர்க்
கண்ணன்  நெடுமால் கடல் கடைந்த கார் ஓத
வண்ணன் படைத்த மயக்கு


எல்லா  திசைகளையும் அந்த திசைக்கான தேவதைகளையும்  அவைகள்  புரியவேண்டிய செயல்களையும்(கடமைகளையும்)  எல்லாவற்றையும்  அசைவு இல  சீர்க் கண்ணன் நெடுமால்  கடல கடைந்த  கருத்த குளீர்ந்த பெருமான் ப்டைத்த  மயக்கத்திற்குரியதாகும் அதாவது  நிலையானது  அசைவு இல்லாத  கண்ணன்  தான்  மற்றவை  மயக்கத்திற்குரியவை நிலையானதல்ல  என்கிறார்.. மேலும் நல்ல விளக்கங்களை ஆராய்ந்து மறுபடி எழுதுகிறேன்