Wednesday, October 30, 2013

மாயனார் செய்யவாய்!

கையின் ஆர் கரிசங்கு அனலாழியர் நீள் வரைபோல்
மெய்யனார் துளபவிரையார் கமழ் நீள் முடி எம்
ஐயனார் அணியரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்
செய்யவாய் ஐயோ என்நைச் சிந்தை கவந்ததுவே


பாணரின் இப்பாசுரத்தில் ஆண்டாளைப்போல  அண்ணலின் அதரம்  கவரப்படுவதாக இருக்கிறது..திருப்பவளச்செவ்வாய் என்றாள்  ஆண்டாள். அதனை விரும்பி வேண்டியவள்.

திருக்கரத்தில்  அழகிய சங்காம்  அனல் வீசும் ஆழியாம்  மலைபோல மேனியாம்  நறுமணம் வீசும்  நீள் முடியாம்  ஐயனாம்  அழகிய அரங்கத்தில் வசி்ப்பவனாம்  அரவின் அணைமீது  இருப்பவனாம்  வினோதம் செய்யும் மாயனாம்  அவனது சிவந்த  வாய்..என்றவருக்கு அங்கேயே  மனம் தங்கிவிட  வார்த்தை  வரவில்லையாம் ஐயோ என  ஆனந்தப்புலம்பல்  எழுகிறது  பெருமானின்   சிவந்த அதரம் அவரது சிந்தனையைக்கவர்ந்து  விட்டதாம்!  நம்மை இந்தப்ப்பாசுரம் கவர்ந்ததுபோல!
 

Tuesday, October 29, 2013

அஞ்சிறைய வண்டு வாழ் பொழில்


துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய் அப்பன்
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம்
 எழுமால்வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக்கொண்டதே!

வெண்நிலாதுண்டினை  தலையில் கொண்ட சிவபெருமானின்  துயரைக்களைந்தவன்  அழகிய  சிறகுகளைக்கொண்ட வண்டுகள்  வாழும் சோலை சூழ்ந்த  அரங்கநகரை ஆளும் தலைவன்  தேவலோகம்  புற லோகம்  பூமி எழாமல் அழுந்திக்கிடக்கும்  மலைகளை முழுவதும்  உண்ட அந்த  கண்டமானதைக்கண்டீர்களா அது அடியேனை  உய்யக்கொண்டது என்கிறார் ஆழ்வார் பெருமான். இந்த உலக வாழ்க்கையில்  நான் சிக்காமல் என்னைக்காப்பாறியதே  என்பதான பொருளாகக்கொள்ளலாம்.

பெருமானின் கழுத்தில் பதிந்த  பார்வையாக இந்தப்பாடல் அமைந்துள்ளது.
 

Sunday, October 27, 2013

பழவினை பற்று

பாரமாய பழவினை  பற்று அறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்
கோரமாதவம் செய்தனன் கொல்? அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆரமார்பு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே!




பழவினை அறுத்து என்று  சொல்லவில்லை  ஏனென்றால் பழவினையானாலும் அதன்மீது நமக்கு  பற்று ஒன்று பற்றிக்கொண்டேதான் இருக்கும் அற்றது பற்றெனில் உற்றது வீடு என்கிறார் நம்மாழ்வாரும்
ஆகவே  அந்தப்பற்றினை  அறுக்கிறாராம் களைந்து என்றால் கூட மறுபடி துளிர்க்க  வாய்ப்பு உண்டு  ஆகவே அதனை அறுத்து  ஆழ்வாரைத்தன் அன்புக்கு   அபிமானத்திற்கு  உரியவராக   ஆக்கிவைத்து அதுமட்டுமின்றி அவரிடத்தில் புகுந்துவிட்டானாம்!  இதற்கெல்லாம் நான்  கடுமையா  தவம் ஏதும் செயலையே  அப்படி  செய்ததாக அறியேனே   இப்படி ஒருகருணை அவனுக்கு என்மேல் வர என்னகாரணம் அந்த  திருமார்பு தானோ(அதில் அன்னை இருப்பதன் கருணையோ என்பது மறைமுகப்பொருள்)  அந்த  திரு ஆர மார்பு  சிறந்த மாலை தரித்த மார்பு அல்லது திரு எனும்  லஷ்மியை நெஞ்சில் மாலையாய் எனும் கொண்ட மார்பு அது அல்லவா  என்னை  ஆட்க்கொண்டுவிட்டது!
வந்தாய்  என் மனத்தே  வந்து நீ புகுந்த பின்னை எந்தாய்  போய் அறியாய்  இதுவே அமையாதோ
என்று கண்ணபுரப்பெருமானை  இன்னொரு ஆழ்வார்  பாடியதை இங்கே  நினைப்போம்
பெருமான்  அருள் பெறுவோம் பாணரை  நம் நெஞ்சில் நிறுத்தி.

சதுர மாமதில்!

சதுரமாமதில்சூழ் இலங்கைக்கு இறைவன் தலைபத்து
உதிர ஓட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓதவண்ணன்
மதுரமா வண்டு பாட மாம்யில் ஆட
   அரங்கத்து அம்மான் திரு வயிற்று
உதரபந்தம் என் உள்ளத்தில் நின்று உலாகின்றதே!



சதுரம் என்றால்  நான்குபக்கம்  என்றுமட்டுமல்ல சாமர்த்தியம், திறமை, நேர்த்தி என்ற இன்னொரு பொருளும் உண்டு!
சதுர மா மதிள் = சாமார்த்தியமாகக் கட்டப்பட்ட  சிறந்த மதில்கள்

சதுரமான வடிவில் உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட இலங்கை நகரம்; அதன் தலைவனாக(இறைவன் என்பார்கள் அரசனை கம்பன்  பலமுறை இச்சொல்லை  பயன்படுத்தி இருப்பான்) திகழ்ந்த ராவணன்; அவன் வீரனாக இருந்தாலும் அதர்ம செயல்களில் ஈடுபட்டதால் ராமனின் கோபத்திற்கு ஆளானான். யுத்தத்தில் ராமன் ராவணனை ஓடவிட்டுத் தொலைத்தான். வீரனான அந்த ராமன் காண்பதற்கு அழகிய கடல் வண்ணன்.

. இந்த அரங்க நகருள்  பெரிய அல்லது சிறந்தவண்டுகள் இனிமையாகப் பாடுகின்றன. சிறந்த மயில்கள் அந்தப் பாட்டிற்கு ஏற்றார் போல ஆடுகின்றன. இன்று அந்த அரங்கனின் (ராமனின் கம்பீரமான) அழகு என் நெஞ்சத்தில் நிலையாக நின்று, மெல்ல அழகாக பவனி வருகின்றது. இந்த அரங்கனின் திருவயிற்றைச் சுற்றி உள்ள உதர பந்தம் எனில் தாமோதரனான(யசோதை  கயிற்றினால்; வயிற்றில் கட்டியபோது உண்டான தழும்பு) அவன் வயிற்றுத்தழும்பு எனவும் கொள்ளலாம்.இன்றும் அரங்கனின் திருமஞ்சனத்தின்ப்போது  இதைக்கண்டு சேவிக்கலாம்.  அது அப்படியே என் உள்ளத்தில் உலாவுகின்றது.

Saturday, October 26, 2013

மந்திபாய் வட வேங்கட மாமலை!

அமலனாதிபிரான் பாசுரங்களில் இன்று மூன்றாவதுநாள்
 மூன்றாம் பாசுரம்.



மந்தி பாய் வடவேங்கட மாமலை  வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவணையான்
அந்திபோல் நிறத்தாடையும் அதன் மேல்
   அயனைப்படைத்ததோர்  எழில்
உந்திமேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே!

சென்ற பாசுரத்தில் அரைச்சிவந்த ஆடைமேல் சிந்தனை சென்றதாகக்குறிப்பிட்ட ஆழ்வார் பெருமான்  இந்தப்பாடலில்
 அண்ணலின் உந்திக்குத்தாவுகிறார்.தாவுதல் குரங்கின் இயல்பு.
அதிலும் மந்திகள்
என்பதில்  பெண்குரங்குகள் என்றது  பெருமாளை  ஏகபுருஷனாக  மனதில்  நினைத்து  அனைவரும்  பெண்களாக   மனத்தளவில் அவனோடு ஐக்கியமாவதால்  மந்தி பாய் என ஆரம்பிக்கிறார் ஆழ்வார். மலைப்பிரதேசத்தில் அதாவது உயர்ந்த இடத்தில்தான்  மந்திகள் தாவிக்கொண்டிருக்கும் . அப்படிப்பட்ட  வடமலை-தமிழகத்திற்கு வடக்குப்புறமான  திருவேங்கடவனின் மலையில்  தேவர்கள்  வந்தனம்  செய்துகொண்டிருக்கிறார்கள்.அங்கே நின்றான்  அரங்கத்தில்
அரவில் துயில்கொள்கிறான் அவனது  அந்திநேரச்சிவப்பிலான ஆடையும் அதன்நடுவே பிரும்மனைப்படைத்த  அழகுமிகு  உந்தி எனும் தொப்புள்
 மேல் என் உள்ளம் சென்றதே் ! உள்ளத்தில்
இன்னுயிர்  ஆக இருப்பவனே!

 

Friday, October 25, 2013

திகட்டாததே, திவ்யபிரபந்தமே!





’குலம் தரும் ’என்னும்  புதியவலைப்பூவிற்கு அனைவரையும் வரவேற்கிறேன் இனி இங்கே  திவ்யபிரபந்தப்பதிவுகள்  வந்துகொண்டிருக்கும்!
இன்றைய பாடல்  அமலனாதிபிரானில்  இரண்டாவது..முதல் பாடலின் பதிவை எண்ணீயமுடிதல்வேண்டும்  என்கிற எனது வலைப்பூவில் நேற்று  பதித்திருந்தேன்,,மீண்டும் இங்கும் அப்பாடல்  உள்ளது)

2.
உவந்த உள்ளத்தனாய்* உலகம் அளந்து அண்டமுற,*
நிவந்த நீள்முடியன்* அன்று நேர்ந்த நிசாசரரை,*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் *கடியார்பொழில் அரங்கத் தம்மான்,*
அரைச்சிவந்த ஆடையின் மேல் *சென்றதாம் என் சிந்தனையே.

முதல் பாட்டில்  ஆதிபிரான்  என்றார்  வேங்கடவனை  முன் வைத்து அரங்கனின் திருக்கமலப்பாதம் கண்டார்.இரண்டாம்பாடலில்  இரு அவதாரங்களைக்கூறுகிறார் பாருங்கள் உலகம் அளந்தவன்  என்னும் வாமனனை! நிசாசரரை அதாவது அரக்கர்களை  வென்ற  இராமனின் அவதாரம்.  உவந்த உள்ளமுடன் அவன் உலகம்  அளந்தபோது அந்ததிருவடிகளை அனைத்து பொருட்களின்மீதும் தாவித்தானே கடந்திருப்பான் ? அனைத்தும் அனைவரும் அவன் திருவடியைதரிசித்த  புண்ணியத்தைக்கொடுத்து அதனால் உவந்த உள்ளத்தவனாம்! அப்படிப்பட்ட அரங்கனின் சிவந்த  ஆடையின் மீது ஆழ்வார் சிந்தனை சென்றதாம்.
முதல் பாசுரத்தில் அவனுடைய திருவடித் தாமரைகள் தாமே வந்து என் கண்ணுள் புகுந்தன என்றார். தாய் தான் முதலில் குழந்தையை அள்ளி எடுப்பாள் அமுதளிப்பாள் குழந்தை தானாக அவளிடம்  செல்ல முடியாது செல்லவும் தெரியாது அதுபோல  அண்ணலின் திருவடித்தாமரைகள்  தாமே வந்து  தன் விழிகளில்  புகுந்தன  என்றார். என்னே அவன் கருணை! பெற்றதாயினும் ஆயின செய்யும் அந்தப்பரிவு!




முதல் நாள் பதிவு.
***********************
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்ப்படுத்த
விமலன் விண்ணவர்கோன்  விரையார் பொழிலவேங்கடவன்*
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்* திருக்கமலபாதம் வந்தென் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே.
 
முதல் வரியைப்பாருங்கள் அமலனாம் ஆதிபிரானாம்
 
அவன்அடியார்க்கு ஆட்படுத்த..வேண்டுமாம்
 
//பூதாதி: நிதி: அவய்ய:
 
பூதாநாம் ஆதிகாரணத்வாத் பூதாதி:’ என்பது ஸ்ரீ பகவத் பாதரின் உரை. 
 
 வெறுமனே ஆதி அன்று. பூதங்கள் எல்லாம் சென்று சேரத் துடிக்கும் லட்சியமான ஆதி. அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து விருப்பங்களையும் அளிக்கும் ஆதி. எது இருந்தால் உலக இன்பங்கள் கூட இனிக்குமோ, எது இல்லையென்றால் வேறு எது இருந்தும் இலலமையே மிஞ்சுமோ அப்படிப்பட்ட ஆதி, உண்டான பொருட்களுக்கு இந்த பூதாதி: என்கிறார் ஸ்ரீபராசர பட்டர்.// என்று  விஷ்ணு சஹஸ்ரநாம விளக்கத்தை  அருமையாக  எழுதிவரும் அன்பரின் மடலில் இதை வாசிக்கவும்  ஆதிபிரானைப்பற்றி  இன்று  எழுத ஆரம்பிக்கவும் சரியாக இருக்கிறது!
 
 
ஆண்டவனைப்பாடுமுன் அவன் அடியார்களைப்பாடுகிறார்  வணங்குகிறார் ஆழ்வார் பெருமான்.. அதைதானே அண்ணல் விரும்புவான்?
 
அமலன்  விமலன்  நிமலன் நின்மலன்  என்று  அண்ணலை நான்குமுறை  திருப்பாணாழ்வார் ஏன் அழைக்கிறார்?
அமலன்..பரிசுத்தமானவன்; குறைகள் அற்றவன்; மேலும் பிறர் குறைகளையும் களைபவன்.

விமலன் - அண்டியவர்களிடம் குற்றம் காண்பது என்ற குறை இல்லாதவன்.

நிமலன் - அடியார்கள் வேண்டினால் தான் உபகாரம் செய்வேன் என்ற குறை இல்லாதவன். எதையும் எதிர்பாராதவன்.

நின்மலன் - அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை "அவர்கள் பேறு பெறுவதற்காக" செய்வதாக நினைக்கும் குறை இல்லாதவன்.
அதாவது அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை கூட தன் பேறாக எண்ணி செய்கிறான்
 
”என்னையா என்னையா  அரங்கன் அழைத்துவரச்சொன்னான்?” என்று நம்பமுடியாமல் கேட்டு  தலையைத்தூக்கிய ஆழ்வார்பெருமானுக்கு  மலையப்பன்  கண்முன் வந்துவிட்டான்.உயரேஇருப்பவன் அவந்தானே ?


அவனைத்துதித்து  முடிக்கவும்அரங்கனின்  பாதம் விழிகளின் வசம்  அங்கு வாசம்!
ஆதிபிரானை வேங்கடவனை முன்வைத்து அரங்கனை  பாதம்  தொழுகிறார் திருப்பாணாழ்வார்.


அரங்கனின் சந்நிதிக்குள்  நுழையுமுன்பாக வலப்புறம்  வேங்கடவனின்    சித்திரம்  காட்சி அளிக்கும்!
 
(என் குருவின் அன்பு ஆணைப்படி   இன்றுமுதல் இந்தத்தலைப்பில்  ஆழ்வார்களை  அன்போடு   மேலும் மேலும் ஆராதிக்க அரங்கன்  அருளவேண்டும்)