Friday, October 25, 2013

திகட்டாததே, திவ்யபிரபந்தமே!

’குலம் தரும் ’என்னும்  புதியவலைப்பூவிற்கு அனைவரையும் வரவேற்கிறேன் இனி இங்கே  திவ்யபிரபந்தப்பதிவுகள்  வந்துகொண்டிருக்கும்!
இன்றைய பாடல்  அமலனாதிபிரானில்  இரண்டாவது..முதல் பாடலின் பதிவை எண்ணீயமுடிதல்வேண்டும்  என்கிற எனது வலைப்பூவில் நேற்று  பதித்திருந்தேன்,,மீண்டும் இங்கும் அப்பாடல்  உள்ளது)

2.
உவந்த உள்ளத்தனாய்* உலகம் அளந்து அண்டமுற,*
நிவந்த நீள்முடியன்* அன்று நேர்ந்த நிசாசரரை,*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் *கடியார்பொழில் அரங்கத் தம்மான்,*
அரைச்சிவந்த ஆடையின் மேல் *சென்றதாம் என் சிந்தனையே.

முதல் பாட்டில்  ஆதிபிரான்  என்றார்  வேங்கடவனை  முன் வைத்து அரங்கனின் திருக்கமலப்பாதம் கண்டார்.இரண்டாம்பாடலில்  இரு அவதாரங்களைக்கூறுகிறார் பாருங்கள் உலகம் அளந்தவன்  என்னும் வாமனனை! நிசாசரரை அதாவது அரக்கர்களை  வென்ற  இராமனின் அவதாரம்.  உவந்த உள்ளமுடன் அவன் உலகம்  அளந்தபோது அந்ததிருவடிகளை அனைத்து பொருட்களின்மீதும் தாவித்தானே கடந்திருப்பான் ? அனைத்தும் அனைவரும் அவன் திருவடியைதரிசித்த  புண்ணியத்தைக்கொடுத்து அதனால் உவந்த உள்ளத்தவனாம்! அப்படிப்பட்ட அரங்கனின் சிவந்த  ஆடையின் மீது ஆழ்வார் சிந்தனை சென்றதாம்.
முதல் பாசுரத்தில் அவனுடைய திருவடித் தாமரைகள் தாமே வந்து என் கண்ணுள் புகுந்தன என்றார். தாய் தான் முதலில் குழந்தையை அள்ளி எடுப்பாள் அமுதளிப்பாள் குழந்தை தானாக அவளிடம்  செல்ல முடியாது செல்லவும் தெரியாது அதுபோல  அண்ணலின் திருவடித்தாமரைகள்  தாமே வந்து  தன் விழிகளில்  புகுந்தன  என்றார். என்னே அவன் கருணை! பெற்றதாயினும் ஆயின செய்யும் அந்தப்பரிவு!
முதல் நாள் பதிவு.
***********************
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்ப்படுத்த
விமலன் விண்ணவர்கோன்  விரையார் பொழிலவேங்கடவன்*
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்* திருக்கமலபாதம் வந்தென் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே.
 
முதல் வரியைப்பாருங்கள் அமலனாம் ஆதிபிரானாம்
 
அவன்அடியார்க்கு ஆட்படுத்த..வேண்டுமாம்
 
//பூதாதி: நிதி: அவய்ய:
 
பூதாநாம் ஆதிகாரணத்வாத் பூதாதி:’ என்பது ஸ்ரீ பகவத் பாதரின் உரை. 
 
 வெறுமனே ஆதி அன்று. பூதங்கள் எல்லாம் சென்று சேரத் துடிக்கும் லட்சியமான ஆதி. அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து விருப்பங்களையும் அளிக்கும் ஆதி. எது இருந்தால் உலக இன்பங்கள் கூட இனிக்குமோ, எது இல்லையென்றால் வேறு எது இருந்தும் இலலமையே மிஞ்சுமோ அப்படிப்பட்ட ஆதி, உண்டான பொருட்களுக்கு இந்த பூதாதி: என்கிறார் ஸ்ரீபராசர பட்டர்.// என்று  விஷ்ணு சஹஸ்ரநாம விளக்கத்தை  அருமையாக  எழுதிவரும் அன்பரின் மடலில் இதை வாசிக்கவும்  ஆதிபிரானைப்பற்றி  இன்று  எழுத ஆரம்பிக்கவும் சரியாக இருக்கிறது!
 
 
ஆண்டவனைப்பாடுமுன் அவன் அடியார்களைப்பாடுகிறார்  வணங்குகிறார் ஆழ்வார் பெருமான்.. அதைதானே அண்ணல் விரும்புவான்?
 
அமலன்  விமலன்  நிமலன் நின்மலன்  என்று  அண்ணலை நான்குமுறை  திருப்பாணாழ்வார் ஏன் அழைக்கிறார்?
அமலன்..பரிசுத்தமானவன்; குறைகள் அற்றவன்; மேலும் பிறர் குறைகளையும் களைபவன்.

விமலன் - அண்டியவர்களிடம் குற்றம் காண்பது என்ற குறை இல்லாதவன்.

நிமலன் - அடியார்கள் வேண்டினால் தான் உபகாரம் செய்வேன் என்ற குறை இல்லாதவன். எதையும் எதிர்பாராதவன்.

நின்மலன் - அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை "அவர்கள் பேறு பெறுவதற்காக" செய்வதாக நினைக்கும் குறை இல்லாதவன்.
அதாவது அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை கூட தன் பேறாக எண்ணி செய்கிறான்
 
”என்னையா என்னையா  அரங்கன் அழைத்துவரச்சொன்னான்?” என்று நம்பமுடியாமல் கேட்டு  தலையைத்தூக்கிய ஆழ்வார்பெருமானுக்கு  மலையப்பன்  கண்முன் வந்துவிட்டான்.உயரேஇருப்பவன் அவந்தானே ?


அவனைத்துதித்து  முடிக்கவும்அரங்கனின்  பாதம் விழிகளின் வசம்  அங்கு வாசம்!
ஆதிபிரானை வேங்கடவனை முன்வைத்து அரங்கனை  பாதம்  தொழுகிறார் திருப்பாணாழ்வார்.


அரங்கனின் சந்நிதிக்குள்  நுழையுமுன்பாக வலப்புறம்  வேங்கடவனின்    சித்திரம்  காட்சி அளிக்கும்!
 
(என் குருவின் அன்பு ஆணைப்படி   இன்றுமுதல் இந்தத்தலைப்பில்  ஆழ்வார்களை  அன்போடு   மேலும் மேலும் ஆராதிக்க அரங்கன்  அருளவேண்டும்) 

3 comments:

 1. அருமை!! அற்புதம்... தொடருங்கள்.. தொடருகிறேன்..

  ReplyDelete
 2. நன்றி பார்வதி

  ReplyDelete
 3. இன்றுதான் இந்த வலைப்பூவை பார்த்தேன். உங்களுடைய எண்ணிய முடிதல் வேண்டும் வலைத்தளத்திலிருந்து வந்தேன்.
  அருமை! தொடர்ந்து படிக்கிறேன்.

  ReplyDelete