Monday, November 4, 2013

அமுதூறும் என் நாவுக்கே!!

மதுரகவி ஆழ்வார் என்பவர் மட்டும் ஆண்டவனைப் பாடாமல் தம் ஆச்சாரியரான நம்மாழ்வாரைப் போற்றிக் கொண்டாடி ஒரேயொரு பதிகம் பாடித் தாமும் ஆழ்வாராகவே ஆகிவிட்டார்.

அவரைப் பற்றிக் கொஞ்சம் அறிந்து கொள்வோம்.
 
தென்தமிழ் நாட்டில் ஸ்ரீவைகுண்டத்தின் அருகே விளங்கும் திருத்தலம் ஆழ்வார் திருநகரி ஆகும். ஆழ்வார் பாடல் பெற்றதால் இது திவ்வியதேசமும் ஆகும். இவ்வூருக்குள் அவதரித்து அசையாப் பிண்டமாய் இருந்து பரம்பொருளாம் ஸ்ரீமந் நாராயணனின் நினைவிலேயே நிறைந்திருந்தவரே நம்மாழ்வார். பிறந்தவுடனே இப்பிறவி பற்றிய தொடர்பையும் சிந்தனையையும் கொடுத்துப் பிறப்பு- இறப்புச் சுழலில் நம்மைத் தள்ளுவது சடம் என்னும் வாயு. அந்த வாயுவைக் கோபித்து விலக்கியவர் நம்மாழ்வார். அதனால் சடகோபர் என்றும் போற்றப்படுகிறார்.
இந்த நம்மாழ்வாருக்குச் சீடராகி, இவரது புகழை மட்டுமே பாடித் தாமும் ஓர் ஆழ்வாராக ஏற்றம் பெற்றவரே மதுரகவியாழ்வார் ஆவார். மதுரகவியாழ்வார் காலத்தால் நம்மாழ்வாருக்கு மூத்தவர். ஆழ்வார் திருநகரி அருகில் உள்ள திருக்கோளூரில் அவதரித்தவர்.
அந்தணர் குலத்தில் தோன்றிய மதுரகவியாழ்வார், வேதசாஸ்திரங்களைக் கற்று இறைபக்தி மேலிட்ட நிலையில் ஸ்ரீகிருஷ்ண பகவானை நேரில் தரிசிக்க விரும்பி வடதேச யாத்திரை சென்றபோது, தேற்குத் திசையில் ஒரு ஜோதிப்பிழம்பு தென்பட்டது. பல நாட்கள் அவ்வாறு தென்பட்டதால், தமது வடதேச யாத்திரையைக் கைவிட்டு, அச்சோதியை அருகில் சென்று பார்க்கும் ஆவலில் மீண்டும் தென்திசையில் நடக்கத் தொடங்கினார்.
அச்சோதியானது ஆழ்வார் திருநகரியில் மறைந்து விடவும், அவ்வூரில் ஏதேனும் விஷயம் உள்ளதா என்று அவ்வூராரிடம் கேட்டார். அவ்வூர்த் திருக்கோயிலின்கண் உள்ள புளியமரத்துப் பொந்தில் யோக நிலையில் வீற்றிருக்கும் நம்மாழ்வாரைப் பற்றி அறிந்தார். ஆர்வமுடன் சென்று நம்மாழ்வாரை வணங்கினார்.
எதுவும் பேசாதிருந்த நம்மாழ்வாரின் அருகில் சென்று, செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்? என்று வினவ, யோக நிலையிலிருந்த நம்மாழ்வார் அது அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்று பதில் கூறிவிட்டு மீண்டும் யோக நிலைக்குச் சென்று விட்டாராம்.
இவ்வுலகில் பிறக்கும் ஜீவாத்மாக்கள் அனுபவிப்பது என்ன? என்பது மதுரகவியாழ்வாரின் கேள்வி.
ஜீவாத்மாக்கள் இப்பிரபஞ்சத்திலுள்ள பொருள்களின் போகத்திலேயே திளைத்து இந்தச் சம்சார வாழ்வில் உழன்று கொண்டிருக்கும் என்பதே நம்மாழ்வாரின் பதில்.
மிக உயர்ந்த தத்துவத்தை மிக எளிமையாக விளக்கிக் கூறிய நம்மாழ்வாரையே அதுமுதல் தம்முடைய குருவாக ஏற்றுக் கொண்டார் மதுரகவியாழ்வார்


 இவர் நம்மாழ்வாரைத் தவிர வேறு எவரையும் அறியாதவர்:அவரது பேரருள் பெற்ற உண்மைச் சீடர்;உலகில் ஆசாரிய பக்தி எப்படி இருக்கவேண்டும் என்பதையும், ஆசாரியன் செய்யும் பேருபகாரத்தையும் எடுத்துக் கூறியவர். பகவானால் செய்யமுடியாததையும் ஆசாரியர் செய்து காட்டக்கூடியவர் என்பதை அறுதி இட்டவர். மதுர கவிகளின் பாடல்கள் மதுரமானவை.

நம்மாழ்வாரின் பெருமைகளை மதுரகவிகள் அருளிய கண்ணி நுண் சிறுத்தாம்பைக் கொண்டே அறியமுடியும். மதுரகவிகள் தம் பிரபந்தத்தில் நம்மாழ்வாரை ஒன்பது முறை நம்பி என்று கூறியுள்ளார். திருவாய்மொழி ஸேவிக்கும் முன்பு கண்ணி நுண் சிறுத்தாம்பு ஸேவிப்பது வழக்கம். நாதமுனிகளுக்கு நம்மாழ்வாரைப் பெற்றுக் கொடுத்ததும் கண்ணி நுண்சிறுத்தாம்பே!

முதல் பாடலைப்பார்க்கலாம்.

  கண்ணி நுண்  சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என்னப்பனில்
நண்ணித்தென்குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே!
 
 மிகவும் நெருக்கமான முடிச்சுகள் கொண்ட, உறுத்தும்படியான கயிறு கொண்டு யசோதை கண்ணனை உரலில் கட்டினாள். அவ்விதம் அவள் தன்னைக் கட்டும்படியாகத் தன்னை அந்த ஸர்வேச்வரன் ஆக்கிக் கொண்டான். இப்படியாக அவள் தன்னைக் கட்டும்படியாக, மாயச்செயல்கள் பல நிறைந்தவனான கண்ணன் செய்து கொண்டான். என்னே அவன் இரக்கம்! இத்தனை எளிமையுடையவனாக உள்ள கண்ணனை அண்டி, அவன் திருநாமத்தைக் கூறுவதைக் காட்டிலும் எனக்கு (மதுரகவி ஆழ்வார்) வேறு ஒன்று மிகவும் இனிமை அளிப்பதாக உள்ளது! ஆழ்வார் திருநகரி என்னும் தென்குருகூருக்குத் தலைவரான நம்மாழ்வார் என்று ஆழ்வாரின் திருநாமம் கூறும்போது, ஸர்வேச்வரனின் திருநாமத்தைக் கூறுவதைக் காட்டிலும் மிகவும் இனிமையாக உள்ளது. இப்படிப்பட்ட அமிர்தம் என் நாவிற்குக் கிட்டியது.
 
 

2 comments:

  1. தன்னை விட தன அடியார்களை நேசிப்பவர்தாம் பெருமாளுக்கு பிடிக்குமாம்.அந்த வகையில் மதுரகவியின் முதற் பக்தி நம்மாழ்வாரின் மீது இருப்பது பகவானுக்கு உகந்ததாகவே இருந்திருக்கும்.முதல் பாசுரத்திலேயே .குருகூர் நம்பியுடன் உள்ள தன் பக்தியை அழகாக சொல்லி உள்ளார்.அதை நீங்கள் சிறப்பாக கூறி மேலும் வரப்போகிற பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் நில்லையில் எங்களை ஆழ்த்திவிட்டீர்கள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி கேபி சார்...உங்கள் ஊக்கமான உற்சாகமான கருத்துக்கள் எனக்கு மேலும் எழுத ஆர்வத்தை ஏற்படுத்துகிறது

    ReplyDelete