Monday, November 25, 2013

மயங்க வலம்புரி வாய் வைத்து....

மயங்க வலம்புரி  வாய் வைத்து வானத்து
இயங்கும் எறி கதிரோன் தன்னை முயங்கு அமருள்
தேர் ஆழியால்மறைத்தது என் நீ திருமாலே
போர் ஆழிக்கையால் பொருது.
 
விளக்கம்

 
திருமாலே   நீ    எண்ணிறந்த மன்னர்கள்  நெருங்கிக்கிடந்த  பாரதப்போர்க்களத்தினில்  எதிரிகள்  அஞ்சி நடுங்கும்படியாக  உனது பாஞ்சசன்யமெனும்  சங்கினை முழக்கி போர் செய்வதற்கான  கருவியாக  இருக்கும்  திருவாழியை ஏந்திய கரத்தினால் பீஷ்மர் முதலானவர்கலை  துரத்தி அதாவது போர் செய்து    தேர் ஆழியால் அதாவது சக்கரத்தினால்      ஆகாயத்தில் சஞ்சரிக்கும் சூரியனை  மறைத்ததுஎதற்காக?

எறிகதிரோன் தன்னைத்தேராழியால் மறைத்த வரலாறு:-

பாரதப்போரில் பதின்மூன்றாநாளிலே அர்ஜுனனின்  மகன் அபிமந்யுவைத் துரியோதனனின் உடன் பிறந்தாளின் கணவனான ஸைந்தவன் கொன்றுவிட,  தன் மகனைக்கொன்ற ஜயத்ரதனை மற்றைநாள் ஸூர்யாஸ்தமனத்திற்குள் தான் கொல்லாவிடில் தீயில்குதித்து உயிர் துறப்பதாக அர்ஜுனன் சபதம் செய்கிறான்.

 அதனையறிந்த பகைவர்கள் பதினாலாநாள் பகல்  முழுவதும் ஜயத்ரதனை வெளிப்படுத்தாமல் சேனையின் நடுவே நிலவறையில் மறைத்துவைத்திருக்க, அர்ஜுனனுடைய சபதம் பழுதாய்விடுமே என்று சிந்தித்துக் கண்ணபிரான் சூர்யனை அஸ்தமிப்பதற்குச் சில நாழிகைக்கு முன்னமே தனது திருவாழியினால் மறைத்துவிட, அப்பொழுது எங்கும் இருள் பரவுகிறது.

 அர்ஜுனன் தன் உறுதியின்படி அக்னிப்ரவேசம் செய்யப்புக, அதனைக் களிப்போடு காண்பதற்குத் துரியோதனாதிகளுடனே ஸைந்தவன் வந்து எதிர்நிற்க, அப்போது கண்ணபிரான் திருவாழியை வாங்கிவிடவே பகலாயிருந்ததனால் உடனே அர்ஜு்னன் ஜயத்ரதனைத் தலைதுணித்தனன் என்பதாம்.1:

 “நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே நாழிகை போகப் படை பொருதவன் தேவகிதன் சிறுவன்” என்றார் பெரியாழ்வாரும்.


. 

3 comments:

 1. மறைத்த வரலாறு விளக்கம் அருமை... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. மிக நன்றாக விளக்கி இருக்கிறீர்கள்.
  ஆழ்வாருக்கே பொறுக்கவில்லை.ஆயுதத்தை கையில் எடுக்கமாட்டேன் என்று வாக்கு கொடுத்த பிறகும்,வலம்புரியால் எதிரிகளை கலங்க அடிக்க வாயில் வைத்ததும்,சக்கரத்தை கையில் ஏந்தி தேரிலிருந்து குதித்தும் பீஷ்மரிடம் ஓட எத்தநித்ததுவும்,தேராழியினால் சூரியனை மறைத்ததுவும் எதற்காக என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு ஒரே சமாதானம் தன் பக்தனுக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டால் பொறுக்கமாட்டாராம் திருமால்..
  உள்ளர்த்தம் அந்த போரை விடுங்கள் என்னுடைய மெய்ப்போரில் உங்களுடைய சக்கராழியினால் என்னுடைய பாவங்களை அழித்து என்னை உங்களிடமே ஐக்யமாக செய்யுங்கள் என்றும் கொள்ளலாம்.. .
  .


  .

  ReplyDelete
 3. அழகான விளக்கம் கேபி சார் எனக்கு அத்தனை யோசி்க்க இயலவே இல்லை நன்றி மிக

  டிடி நன்றி தங்களுக்கும்

  ReplyDelete