Monday, November 18, 2013

சூட்டினேன் சொல்மாலை!

முதலாழ்வார்கள் மூவர். அவர்களில்  முதலாமவரான பொய்கை ஆழ்வார்  காஞ்சிபுரம் திருவெஃகாவில் ஒரு பொய்கையில்  பூத்த பொற்றாமரை மலரில் பொலிவுடன் அவதரித்தவர். பரந்தாமனின் திருச்சங்கின் அம்சம்.வையத்தை அகலாக  வார்கடல் நீரை நெய்யாகக்கொண்டு வான் சூரிய்னை நாரணனுக்கு  விந்தைமிகு விளக்கேற்றி மகிழும்  இவரது  பாடல்கள் எளிமையானவை. காலம்   7ம் நூற்றாண்டு  நூறுபாசுரங்கள்  கொண்ட முதல் திருவந்தாதி  இவரால் பாடப்பெற்றவைகள்.
திவ்ய்பிரபந்தம் என்னும் அருந்தமிழ் வேதத்தை  தமது பாடல்களால் நம்மிடம் விட்டுச்சென்றுள்ள மகான்கள்  ஆழ்வார்கள்.



பொய்கை ஆழ்வாரின்  பாசுரங்களை ஆராதிப்போம்..

திருக்கோவிலூர் என்ற இடத்தில் அன்று.  மழை, காற்றுடன் கூடிய பின்மாலைப் பொழுது. நன்கு இருட்டிவிட்டது. மழைக்கு ஒதுங்க நினைத்த பொய்கையாழ்வார் மிருகண்ட முனிவர் ஆசிரமத்தில் உள்ள இடைகழியில் (ரேழி என்றும் சொல்லுவர். வீட்டின் அல்லது கோவிலின் நுழைவாயிலில் உள்ள நடைபாதையைக் குறிக்கும்.) ஒதுங்கினார். அங்கே சற்று ஓய்வெடுக்க நினைத்து, படுத்துக் கொண்டார். சற்று நேரத்திற்கெல்லாம் அங்கே பூதத்தாழ்வார் வந்தார். “ஒருவர் படுக்கலாம் இருவர் இருக்கலாம்” என்று கூறி, பொய்கையாழ்வார் அவருக்கு இடம் கொடுத்தார். சற்று நேரம் கழித்து பேயாழ்வார் நனைந்துகொண்டு அங்கு வந்தார். “ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்” என்று கூறியபடியே மூவரும் நின்றனர். அப்போது அந்த இடத்தில் திடீரென்று ஒரு நெருக்கடி ஏற்பட்டது போல் உணர்ந்தார்கள். யார் இப்படி இவர்களைப் போட்டு நெருக்குகிறார்கள் என்று காண்பதற்காக முதலில் பொய்கையாழ்வார் பாடிய  பாசுரம் இது.


முதல் திருவந்தாதி.
இயற்பா.

  தனியன்

முதலியாண்டான் அருளிச்செய்தது.

கைதை சேர்  பூம்பொழில் சூழ் கச்சிநகர் வந்துதித்த
பொய்கைப்பிரான் கவிஞர்பேரேறு-வையத்து
அடியவர்கள்  வாழ அருந்தமிழ் நூற்று அந்தாதி
படி விளங்கச்செய்தான் பரிந்து...



இனி  பாசுரம்.

வையம் தகளியா, வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடர் – ஆழி நீங்குகவே

உலகமே அகலாக, கடலே நெய்யாக, சூரியன் விளக்காக, இடர் நீங்க பொய்கை ஆழ்வார் சூட்டிய சொல்மாலை  துன்பக்கடலை  நீக்கிவிடும். ஆம் அதைத்தான்  இங்கு  அருள்கிறார் ஆழ்வார் பெருமான்.

 சுடர் ஆழியான்  அடியாம்!  ஒளி மிகுசக்கரம் கையேந்திய
அண்ணலின் திருவடியைப்பிரார்த்தனை செய்து  சொல்மாலையை  கட்டத்தொடங்குகிறார்.

 

3 comments:

  1. விளக்கம் அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பொய்கை ஆழ்வார் தெரியும் .. மேலும் சில விசயங்களை அறிந்து கொண்டேன்... கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete