Tuesday, November 19, 2013

என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது?

2ம் பாசுரம் பொய்கைஆழ்வார் பெருமானுடையது

என்று கடல் கடைந்தது? எவ்வுலகம் நீர் ஏற்றது?
ஒன்றும் உணரேன் நான் அன்று அது
அடைத்து  உடைத்து  கண்படுத்த ஆழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த  பார்!

  விளக்கம் 

என்று  கடலை  (தேவர்களுக்காக)  கடைந்தான்  ?
எந்த உலகம்  நீரை(மாவலி  அளித்த  நீர் மூவுலகை அளந்த வாமனனால்) ஏற்றுக்கொண்டது?
ஒன்றையும் நான் உணரவில்லை.(அந்த இனிய அனுபவங்களைப்பெற்றிலேன் என்னும்  தாபம்)  அன்று அந்தக்கடலானது உன்னால் சேதுப்பாலம் கட்டப்பட்டு அடைக்கப்பட்டது  ராவண சம்ஹாரம் முடிந்ததும் அதன் மலைக்கற்கள் உடைக்கப்பட்டன. நடந்த கால்கள் நொந்ததால்  ஆழியில் நீ  பல்ளிகொண்டாய்.இந்த  உலகமானது  உன்னால் படைக்கப்பட்டு  இடந்து(வராஹ அவதாரத்தில்  பூமியைப்பிளந்தார் பெருமான்)  உண்டு(கிருஷ்ணாவதாரம்  மேலும் பிரளயவெள்ளத்தில் உலகை உண்டு பாதுகாத்து  மீண்டும்) உமிழ்ந்த அதாவது வெளிப்படுத்தினதாகும்!

4 comments:

  1. ஆசிரியர் சிறு பிள்ளையை கேள்வி கேட்பதுபோல் ,இங்கு ஆழ்வார் பகவானிடமே 'என்று கடல் கடைந்தது? எவ்வுலகம் நீர் ஏற்றது?' என்றெல்லாம் கேள்வி கணைகளை தொடுக்கிறாரே!கையில் குச்சி தான் இல்லை!!இதை பார்த்தால் துதி பாடல்களாக இல்லாமல் அவரிடம் நேரிலேயே பேசுகின்ற பாவனையை உண்டாக்கி விட்டதே.
    தினமும் உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  2. ரொம்ப எளிமையாக விளக்கி இருக்கிறீர்கள் அக்கா!!!!. ரொம்ப நன்றி!!!.. அடுத்த பகிர்வுக்கு ஆவலுடன்..

    பார்வதி இராமச்சந்திரன் (பாரு)

    ReplyDelete
  3. ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  4. மிக்க நன்றி கேபி சார், பாரு மற்றும் டிடி.

    ஆமாம் ஆழ்வார் பிரியமுடனும் உரிமையுடனும் எளிமையாக தனது கேள்விகளை அண்ணலுக்குக்கேட்டு அதற்கான பதிலையும் உரைக்கிறார்.

    ReplyDelete