Tuesday, November 26, 2013

மாவடிவின் நீ அளந்த மண்!

பொருகோட்டோர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன்
ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ, - விரிதோட்ட
சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க,
மாவடிவின் நீயளந்த மண்?
 
 
 
 
பொய்கைஆழ்வார் பெருமானின் இந்தப் பாசுரத்தில்  வராஹப்பெருமான்  பிரசன்னமாகிறார்.
 அவருடன்  உலகளந்த வாமனனும்!
 
விளக்கம்...
 
 
விரி தோட்ட என்ற  வரியிலிருந்து  ஆரம்பிக்கவேண்டும்.   ஒளி  விரிந்த  மகரகுண்டலங்களை அணிந்த   சிவந்த செந்தாமரை போன்ற திருவடிகளை   வளரச்செய்து  திசையெல்லாம்  நடுங்கச்செய்து  வானத்தையும் நடுங்கவைத்து  (திரிவிக்கிரமனாக வந்து)  மா(பெரிய)  வடிவத்தில் வந்து  நீ உன் திருவடியினால்  அளந்த பூமியானது,  பொருகோட்டோர் ஏனமாய்ப்புக்குஎன்பது   நிலத்தை்க்கோரப்பற்களால்குத்தி திரிகிற வராஹ மூர்த்தியாக   புக்கு என்பது பிரளய வெள்ளம்,  இடந்தாய்க்கு அன்று என்பது   அண்டத்தினின்றும் பூமியைக்குத்தி எடுத்து வந்த அக்காலத்தில், உனது, ஒருகோட்டின் மேல் கிடந்ததன்றே என்பது.. ஒரு கோரப்பல்லிலே ஏகதேசத்தில் அடங்கிக்கிடந்ததன்றோ என்பதாகும்.
 
பொருகோட்டோரேனமாய்ப்புக்கிடந்த வரலாறு:-
 
ஹிரண்யகசிபுவின் உடன்பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரன் தன் வலியையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது தேவர் முனிவர் முதலியோரது வேண்டிகோளினால் திருமால் மஹாவராஹரூபியாகத் திருவ்வதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனை நாடிக்கண்டு பொருது கோட்டினாற்குத்திக் கொன்று பாதளலோகத்திற் சார்ந்திருந்த பூமியைக்கோட்டினாற்குத்தி அங்கு நின்று எடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளினன் என்பதாம்.
 
. “பாராருலகம் முதுமுந்நீர் பரந்தகாலம் வளைமருப்பில் ஏராருருவத்தேனமா யெடுத்த வாற்றலம்மான்-” என்ற திருமங்கையாழ்வாரின் பாசுரம்  இங்கு நினைக்கத்தக்கது.

4 comments:

  1. இந்த பாசுரத்தில் என்ன விசேஷம் என்றால் வாமனனாக மாவலியிடமிருந்து பூமியை பெற்ற பொழுது திரிவிக்ரமனாக வளர்ந்த அவர் திருவடிக்கு பொருந்தி இருந்த அதே அகண்ட பூமி ,வராஹ அவதாரத்தில் பூமியை கொணர்ந்த போது வராஹத்தின் மூக்கு கொம்பின் அளவுக்கும் சிறியதாக அமைந்ததே என்பதே ஆகும்.
    இதைத்தான் பின்னொரு பாசுரத்தில் கண்டு வியக்கிறார்
    "பிரான்,உன் பெருமை யாரறிவார் ?.........
    எயிற்று அளவு போதா ஆறு என்கொலோ எந்தை
    அடிக்கு அளவு போந்தபடி"

    ReplyDelete
  2. அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. கேபி சார் அருமை அருமை உங்க விளக்கம் மகிழ்ச்சியாக இருக்கிறதே இன்னொரு பாசுரத்தில் ஆழ்வார் வியப்பதை நான் இன்னும் வாசிக்க வில்லை ..நன்றி மிக

    டிடி உஙக்ளுக்கும் நன்றி

    ReplyDelete
  4. ஷைலஜா வும் KParthasarath வும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் அருமையாக விளக்கம் சொல்கிறீர்கள் , ... சபாஷ் சரியான போட்டி..
    வெற்றிவேல் ... வீர வேல்...!!! கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete