Thursday, November 28, 2013

வாய் அவனை அல்லது வாழ்த்தாது!

வாய்  அவனை அல்லது வாழ்த்தாது-கை உலகம்
தாயவனை அல்லது தாம் தொழா-பேய்முலை நஞ்சு
ஊண் ஆக  உண்டான் உருவொடு பேர் அல்லால்
காணா  கண் கேளா செவி.

ஆழ்வார் பெருமானின் 11வது பாசுரம் இது..

இதைப்போலவே  இருக்கும்     இந்த இரு பாடல்களைப்பாருங்கள்...

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே


பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே

என்ற சிலப்பதிகாரப்பாடல்  நினைவுக்கு வருகிறது

ஆழ்வார் பெருமான் பாசுர விளக்கம் பார்ப்போம்


என் வாயானது சர்வேஸ்வரனையன்றி  யாரையும்  வாழ்த்தாது,  எனது கரமானது உலகின் தாய்போன்றவனை(பெற்றதாயினும் ஆயின செய்யும் என்னும் குலசேகர ஆழ்வார் அருளியதை நினைப்போம் இங்கு) தவிர மற்றவரை வணங்காது..
பூதனையிடம் நஞ்சை உணவாக  உண்டானே அவனது    திருமேனியையும்  திருநாமமும் தவிர என் கண்கள்  வேறேதும் காணாது (என் அமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக்கானாவே  என்றாரே பாணரும்) செவி வேறெதையும் கேட்காது.
எத்தனை அருமையான  பாட்டு! எத்தனை எளிமை  ஆழ்வாருக்கு! அதைவிட  எத்தனை  பிரியம் அவருக்கு  பெருமான் மீது!  பொய்கைஆழ்வார் பெருமான்  திருவடி சரணம்!




 

4 comments:

  1. மிகவும் அருமையான பாட்டு... நன்றி...

    ReplyDelete
  2. தன்னுடைய கண்,காது,கை,வாய் எல்லாம் திருமாலைத்தவிர வேறு எதையும் ஏற்றுகொள்ளாது என்கிற கருத்தை ஆழ்வார் அழுத்தமாக சொல்கிறார்.அப்படி திருமாலிடம் ஈடுபடாவிட்டால் அவை அந்தந்த அவயவங்கள் இல்லையாம்.அப்படி ஒரு focused பக்தி..அதை வலியுறுத்த நீங்களும் மேலும் இரண்டு மேற்கோள்களை காண்பித்து உள்ளீர்கள்.

    ம பெ சீனிவாசன் அவர்கள் இந்த இடத்தில் ஆழ்வாருடைய இன்னொரு பாசுரத்தையே நினைவூட்டுகிறார்.

    "பெயரும் கருங்கடலே நோக்கும்; ;ஆறு ஒண்பூ
    உயரும் கதிரவனே நோக்கும் -உயிரும்
    தருமனையே நோக்கும்;ஒண்தாமரையான் கேள்வன்
    ஒருவனையே நோக்கும்-உணர்வு "

    ஆறுகள் எல்லாம் கடலையே அடையும்.தாமரை சூரியனையே நோக்கும், உயிர்களோ காலனையே அடையும் இவைகளை எல்லாம் போல ஞானமும் திருமாலை பற்றியே நிற்கும்.வேறு ஒன்றை பற்றாதாம்..இந்த ஒர்முக,எல்லா அவயவங்களை குவித்து,மனம் சிதறாத திருமாலின் நினைவே உண்மையான ஞானத்தின் குறிக்கோள் என்பதாக அர்த்தம்

    ReplyDelete
  3. கேப் சார் மபெ சீனிவாசன் ஆழ்வார் பாசுரம் கூறி உவமைஅளித்தது அருமை.// இந்தப்பாட்டு நானறியாதது.நன்றி அளித்தமைக்கு. டிடிசாருக்கும் நன்றி

    ReplyDelete
  4. வாய் அவனை அல்லது வாழ்த்தாது ... சிரம் அவனை அல்லாது தன்னை தாழ்த்தாது ... கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete